பலத்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த பலத்த மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. மேலும் மழையின் காரணமாக 371 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த பலத்த மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. மேலும் மழையின் காரணமாக 371 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியது.
பலத்த மழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் சமீபத்தில் உருவான மாண்டஸ் புயல் காரணத்தினாலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
கடந்த ஓரிரு தினங்களாக திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆங்காங்கே மிதமான மழையும், சில இடங்களில் சாரல் மழையும் பெய்தது. மேலும் சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடனே காணப்பட்டது.
நேற்று பகலில் விட்டு, விட்டு லேசான மழை பெய்து. தொடர்ந்து நேற்று இரவு முதல் திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகி்றது. இந்த மழை விடிய, விடிய பெய்தது.
மழையினால் இன்று பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாணவ, மாணவிகள் நனைந்தபடி சென்றனர். திருவண்ணாமலையில் நேற்று பகலில் விட்டு, விட்டு பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. மேலும் மேடு, பள்ளமான சாலையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சி அளித்தது.
371 ஏரிகள்
சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். மேலும் சாலையில் நடந்தும், இருசக்கர வாகனங்களில் சென்றவர்களும் கையில் குடை பிடித்த படியும், மழை கோட் அணிந்தபடியும் சென்றனர்.
தொடர்ந்து பெய்து வரும் மழையினால் பெரும்பாலானோர் வீட்டிற்குள்ளேயே முடங்கினர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மழையின் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது.
மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கீழ் 697 ஏரிகள் உள்ளன. இதில் 371 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி உபரி நீர் வெளியேறுகிறது. 75-ல் இருந்து 100 சதவீதம் வரை 47 ஏரிகளும், 50-ல் இருந்து 75 சதவீதம் வரை 110 ஏரிகளும், 25 முதல் 50 சதவீதம் வரை 142 ஏரிகளும் நிரம்பி உள்ளது. மீதமுள்ள 27 ஏரிகளுக்கு முறையான நீர் வரத்து ஏற்படாமல் 25 சதவீதத்திற்கு கீழ் நீர் நிரம்பி உள்ளது.
ஜமுனாமரத்தூரில் அதிகபட்சம்
அதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 அணைகள் உள்ளன. இதில் இன்று காலை நிலவரப்படி சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 4645 கனஅடி நீர்வரத்து உள்ளது. அந்த நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது.
குப்பநத்தம் அணைக்கு வினாடிக்கு 143 கனஅடி நீர்வரத்து உள்ளது. அந்த அணையில் இருந்து வினாடிக்கு 178 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
மிருகண்டாநிதி அணைக்கு வினாடிக்கு 126 கனஅடி நீர்வரத்து உள்ளது. இதில் இருந்து விளாடிக்கு 84 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.
செண்பகத்தோப்பு அணைக்கு விளாடிக்கு 189 கனஅடி நீர்வரத்து உள்ளது. இதில் இருந்து வினாடிக்கு 36 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.
நேற்று பெய்த மழையில் அதிகபட்சமாக ஜமுனாமரத்தூரில் 42 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.
மற்ற பகுதிகளில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
கீழ்பென்னத்தூர்- 22.6, ஆரணி- 22, வெம்பாக்கம்- 20.9, செங்கம் மற்றும் கலசபாக்கம்- 19, போளூர்- 17.4, திருவண்ணாமலை- 15.5, செய்யாறு- 10.5, சேத்துப்பட்டு- 8.5, வந்தவாசி- 8, தண்டராம்பட்டு- 2.