நூல் விலை குறையுமா?

Update: 2023-04-30 15:49 GMT


கடந்த 3 மாதங்களாக நூல் விலையில் மாற்றம் இல்லாத நிலையில் விலை குறையுமா? என்ற எதிர்பார்ப்பு தொழில்துறையினரிடையே காணப்படுகிறது.

நூல் விலையில் அடிக்கடி மாற்றம்

திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் 1000-க்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்களும், அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்றபடி நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரிப்பது வழக்கம்.

நூல் விலை உள்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தநிலையில் நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால் தொழில்துறையினர் ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்படும்.

நூல் விலை குறையுமா?

கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி நூல் விலை உயர்ந்து வருகிறது. எனவே நூல் விலையை குறைக்க தொழில் துறையினர் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 20 ரூபாய் நூல் விலை குறைந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் நூல் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஜனவரி மாத நிலையை தொடரும் என நூற்பாலைகள் அறிவித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக மார்ச் மாதத்திற்கான நூல் விலைகளும் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை. இதுபோல் ஏப்ரல் மாதத்திலும், கடந்த மாத விலையே தொடரும் என நூற்பாலைகள் தெரிவித்துள்ளன.

கடந்த 3 மாதங்களாக அதிகரிக்காமல், ஒரே நிலையில் நூல் விலை இருந்து வருவது தொழில் துறையினருக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது. இருப்பினும் மே மாதத்திற்கான நூல் விலையை நூற்பாலைகள் இன்று (திங்கட்கிழமை) அறிவிக்க உள்ளன. இதனால் நூல் விலை மேலும் குறையுமா? என்ற எதிர்பார்ப்பில் திருப்பூர் தொழில்துறையினர் உள்ளனர்.

மேலும் செய்திகள்