செயற்கை இழை ஆடை தயாரிப்பில் முனைப்பு

Update: 2022-06-17 14:12 GMT


திருப்பூரில் செயற்கை இழை ஆடை தயாரிப்பில் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் முனைப்பு காட்டியுள்ளனர். இதனால் பருத்தி நூல் விலையில் தள்ளுபடி செய்து சில நூற்பாலைகள் அறிவித்துள்ளன.

செயற்கை இழை ஆடை தயாரிப்பு

பனியன் தொழிலுக்கு முக்கிய மூலப்பொருளாக விளங்கும் பருத்தி நூல் விலை கடந்த 1½ ஆண்டுகளாக அபரிமிதமாக அதிகரித்து விட்டது. இதன்காரணமாக பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் பெரும்பாதிப்பை சந்தித்தன. வெளிநாடுகளில் இருந்து ஆர்டர்களை பெறுவதில் தயக்கம் காட்டின. ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து புதிய ஆர்டர்கள் வருகையும் குறைந்து விட்டன. ஏற்றுமதி நிறுவனங்களின் உற்பத்தி குறைந்து விட்டன.

ஏற்றுமதி நிறுவனங்களை சார்ந்த நிட்டிங், சாய ஆலை, பிரிண்டிங், எம்ப்ராய்டரி உள்ளிட்ட நிறுவனங்களும் செயல்படுவதில் சுணக்கம் நீடித்து வருகிறது. பருத்தி நூல் விலை உயர்வே இந்த ஒட்டுமொத்த பாதிப்பை ஏற்படுத்தியதன் காரணமாக தற்போது பாலியெஸ்டர் நூலை பயன்படுத்தி ஆடை தயாரிப்பில் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் முனைப்பு காட்டி வருகிறார்கள். பாரம்பரியமிக்க, திருப்பூரின் அடையாளமாக திகழ்ந்து வரும் பருத்தி ஆடைகள் தயாரிப்பை கைவிட்டு செயற்கை இழை ஆடை தயாரிப்புக்கு மாறி வருகிறார்கள்.

நூல் விலையில் தள்ளுபடி

பனியன் உற்பத்தி நிறுவனங்கள் நிறுத்தம் ஒருபுறம், செயற்கை இழை ஆடைகளுக்கு மாறும் உற்பத்தியாளர்கள் மறுபுறம் என தொழில்தன்மை மாறி செல்வதால் தற்போது நூற்பாலைகளில் பருத்தி நூல் அதிகளவு தேக்கமடைந்ததாக கூறப்படுகிறது. இதன்காரணமாக கோவை சுற்றுப்புற பகுதியை சேர்ந்த சில நூற்பாலை உரிமையாளர்கள் பருத்தி நூல் கிலோவுக்கு ரூ.20 வரை தள்ளுபடி விலையில் விற்பனை செய்து வருகிறார்கள். இதனால் திருப்பூர் பின்னலாடை துறையினர் சிறிது நிம்மதி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து டீமா சங்க தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது:-

பருத்தி நூல் ஆடைகள் தயாரிப்பில் ஆர்வம் செலுத்தாமல் செயற்கை இழை ஆடை தயாரிப்பில் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் ஆர்வம் செலுத்த தொடங்கியுள்ளனர். அதாவது தமிழ்நாட்டின் அடையாளமாக திகழ்ந்த பருத்தி ஆடை தயாரிப்பு மெல்ல மெல்ல அழிய தொடங்கியிருக்கிறது. உள்நாட்டு உற்பத்தியாளர்கள் செயற்கை இழை ஆடை தயாரிப்புக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருகிறார்கள். இதனால் பருத்தி நூல் வாங்குவது குறைந்து விட்டது. வெளிநாட்டு ஆர்டர்கள் குறைவால் ஏற்றுமதி நிறுவனங்களின் இயக்கமும் குறைந்துள்ளன.

அடையாளத்தை இழக்கும்

இதை கருத்தில் கொண்டு சில நூற்பாலை உரிமையாளர்கள் கிலோவுக்கு ரூ.20 வரை தள்ளுபடி விலையில் நூல் விற்பனை செய்கிறார்கள். திருப்பூரை பொறுத்தவரை 50 சதவீதம் பேர் செயற்கை இழை ஆடைகள் தயாரிப்பில் ஈடுபட தொடங்கியிருக்கிறார்கள். இதே நிலை நீடித்தால் பருத்தி நூல் ஆடைகள் உற்பத்தி குறைந்து செயற்கை இழை ஆடை தயாரிப்பு அதிகரிக்கும். உலக அளவில் பருத்தி ஆடையின் அடையாளமாக திகழ்ந்த திருப்பூர் மெல்ல, மெல்ல அடையாளத்தை இழக்கும். பருத்தி நூல் நுகர்வு குறைந்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். மத்திய, மாநில அரசுகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து தொழிலை காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்