செயல்படாத கண்காணிப்பு கேமராக்களால் சிக்காத திருடர்கள்

திண்டுக்கல்லில் செயல்படாத கண்காணிப்பு கேமராக்களால் திருடர்கள் சிக்குவதில்லை.

Update: 2023-07-04 21:15 GMT

குறுக்கு வழியில் பொருள் தேடும் சமூக விரோதிகளால் குற்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. வேலை செய்யாமல் சொகுசாக வாழ நினைத்து பிறரின் சட்டைப்பையில் மட்டுமின்றி வீடுகளிலும் களவாடுகின்றனர். திருட்டு, வழிப்பறி சம்பவங்களால் நகை, பணம் மற்றும் பொருட்களை இழந்தவர்கள் ஏராளம்.

குற்றங்கள்

அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப சமூக விரோதிகளின் கைவரிசையும் மாறுபட்டு வருகிறது. விதவிதமான யுக்திகளில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். வீடு புகுந்து கொள்ளை, தனியாக செல்வோரிடம் நகை, செல்போன் மற்றும் பணம் பறிப்பு, வாகன திருட்டு என குற்றங்களில் புதுமையை கையாளுகின்றனர்.

மக்கள் தொகைக்கு ஏற்ப போலீசார் இல்லாததால் திருடர்களை உடனடியாக பிடிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. அதேபோல் திருடர்கள் பற்றி தகவல் கொடுக்க முன்வருவோரின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. இதனால் தொழில்நுட்ப உலகில் திருடர்களை பிடிப்பது போலீசாருக்கு பெரும் சவாலாகவே உள்ளது.

மூன்றாவது கண்கள்

இத்தகைய சூழலில் போலீசாருக்கு கண்கண்ட சாட்சியாக இருப்பவை கண்காணிப்பு கேமராக்களே. இவை மூன்றாவது கண்களாக இருந்து குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காண்பித்து விடுகின்றன. உண்மை சொல்லும் உற்ற தோழனாக திகழும் கண்காணிப்பு கேமராக்கள் தொடக்கத்தில் நகரங்களில் மட்டுமே பொருத்தப்பட்டு வந்தன.

ஆனால் திருடர்களை அடையாளம் காணும் வகையில் கிராமங்களில் கூட கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும்படி போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். எனவே பஸ் நிலையம், வங்கி, ஏ.டி.எம். எந்திர மையங்கள், கடைகள், பெரிய வணிக நிறுவனங்கள், முக்கிய குடியிருப்பு பகுதிகள் கண்காணிப்பு கேமராக்களின் கட்டுப்பாட்டுக்கு மாறி வருகின்றன.

கண்காணிப்பு கேமராக்கள்

திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், கடைவீதிகள், வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் தெருக்கள் சந்திக்கும் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

மேலும் விடுபட்ட பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த போலீசார் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் நகரில் திரும்பிய திசை எல்லாம் கண்காணிப்பு கேமராக்களாக தான் காட்சி அளிக்கின்றன. அதிலும் ஒருசில சாலைகளில் வேகமாக செல்லும் வாகனங்களின் பதிவு எண்களை கூட துல்லியமாக பதிவு செய்யும் கேமராக்கள் இருக்கின்றன.

இமைகளை மூடிய...

ஆனால் ஒருசில பகுதிகளில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்கள் முறையாக பராமரிக்கப்படாமல் விடப்பட்டதாக தெரிகிறது. இதனால் 24 மணி நேரமும் விழித்து இருந்து காட்சிகளை பதிவு செய்த மூன்றாவது கண்கள் இமைகளை மூடிவிட்டன. முறையான பராமரிப்பு இல்லாமல் கண்காணிப்பு கேமராக்கள் இமைகளை மூடிய கண்களாக செயலிழந்து விட்டதாக பலரும் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் திண்டுக்கல் நகரில் சில கண்காணிப்பு கேமராக்கள் தலைகீழாக தொங்கி கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. தி்ண்டுக்கல் ரெயில் நிலையம் அருகே, நாகல்நகர் மேம்பாலம், பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் கேமராக்கள் கழன்று தொங்கி கொண்டிருக்கின்றன.

திருடர்கள் உற்சாகம்

அதேபோல் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் 40-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. ஒவ்வொரு கேமராவும் இருந்த இடத்தில் வரிசை எண் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆனால் ஒருசில இடங்களில் வரிசை எண் மட்டுமே இருக்கிறது. கேமராக்களை காணவில்லை. இதுதவிர சில இடங்களில் கேமராக்கள் இருந்தும் செயல்படவில்லை.

இதனால் திருடர்கள் மிகவும் உற்சாகமாக பஸ் நிலையம் உள்பட பல இடங்களில் வலம் வருகின்றனர். திண்டுக்கல் பஸ் நிலைய பகுதியில் செல்போன் பறிப்பு, நகை பறிப்பு சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. ஆனால் கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாததால், வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை பிடிக்க முடியாமல் போலீசார் தவிக்கின்றனர்.

எனவே திண்டுக்கல் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் பொருத்தப்பட்டு இருக்கும் கண்காணிப்பு கேமராக்களை சரிசெய்து செயல்பட வைக்க வேண்டும். அதன்மூலம் குற்றங்களில் ஈடுபடுவோரை உடனுக்குடன் அடையாளம் கண்டு கைது செய்தால், குற்றங்கள் குறையும் என்பது அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதற்கு போலீசார் உரிய முயற்சிகளை மேற்கொள்வார்களா?

Tags:    

மேலும் செய்திகள்