அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு சிகிச்சை செலவு தொகை முழுமையாக கிடைக்காத நிலை

கொரோனா பாதிப்பால் உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு சிகிச்சை செலவு தொகை முழுமையாக கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2023-09-18 19:19 GMT


கொரோனா பாதிப்பால் உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு சிகிச்சை செலவு தொகை முழுமையாக கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசுக்கு பரிந்துரை

கொரோனா பாதிப்பு காலத்தில் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற நிலையில் தனியார் ஆஸ்பத்திரிகள் சிகிச்சைக்கான மொத்த செலவையும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அரசு ஊழியர்களின் குடும்பத்தினரிடம் பெற்றுவிட்ட நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தினர்் செலவழித்த சிகிச்சை தொகையினை வழங்க அரசு காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் ஏற்பாடு செய்தது. இதற்காக பெறப்பட்ட சிகிச்சை செலவு பட்டியல் மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் தலைமையிலான குழுவினால் அங்கீகரிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

சிகிச்சை தொகை

அரசு இத்தொகையினை வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தது. ஆனால் பெரும்பாலான அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு காப்பீட்டு நிறுவனம் பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சை தொகையினை முழுமையாக வழங்காத நிலை நீடிக்கிறது.

இதுகுறித்து மதுரை ஐகோர்ட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கும், காப்பீட்டு நிறுவனத்திற்கும் உத்தரவிட்டது. ஆனாலும் இன்னும் முழுமையாக வழங்கப்படாத நிலை நீடிக்கிறது. இதனால் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தினர் சிகிச்சைக்கு ஏற்பட்ட நிதி செலவினை சமாளிக்க முடியாமல் பாதிக்கப்படும் நிலை தொடர்கிறது.

வலியுறுத்தல்

எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்த விவரங்களை சேகரித்து உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு சிகிச்சை செலவினை முழுமையாக வழங்கிட காப்பீட்டு நிறுவனத்திற்கு அரசு அறிவுறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சிலர் நீதிமன்றங்களுக்கு சென்று பரிகாரம் தேடினாலும் அரசு பரிந்துரை செய்த தொகையை காப்பீட்டு நிறுவனம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

Tags:    

மேலும் செய்திகள்