விதை நெல் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்கு விதை நெல் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2023-08-27 18:07 GMT

நேரடி நெல் விதைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில் கறம்பக்குடி, அறந்தாங்கி, மணமேல்குடி ஒன்றிய பகுதியில் உள்ள சில ஊராட்சி பகுதிகள் மட்டும் காவிரி பாசன பகுதிகள் ஆகும். மற்ற பகுதிகள் வானம் பார்த்த பூமியாகவே உள்ளன. மழைகாலங்களில் ஏரி, குளங்கள் நிரம்பி அதன் மூலமும், ஆழ்குழாய் பாசனம் வாயிலாகவும் மட்டுமே மாவட்டத்தில் விவசாயம் நடைபெற்று வருகிறது.

காவிரி பாசன பகுதிகளிலும் கடைமடை பகுதிகளுக்கு முழுமையாக தண்ணீர் வராததால் பெரும்பாலும் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்வது இல்லை. சம்பா சாகுபடி மட்டுமே நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்டுக்கு சுமார் 2.5 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். கோடை மழையின் ஈரப்பதத்தைப் பயன்படுத்தி வயலை உழுது தயார்படுத்தி இருந்த நிலையில் தற்போது, நேரடி நெல் விதைப்பு பணியானது பரவலாக நடைபெற்று வருகிறது. நாற்று நடவுப் பணியானது செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறும்.

கோரிக்கை

இந்நிலையில், கறம்பக்குடி, கந்தர்வகோட்டை, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் மற்றும் மணமேல்குடி ஆகிய பகுதியில் தற்போது நேரடி நெல் விதைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் வயலை உழுது சம்பா சாகுபடிக்கு தயார்படுத்தி வருகின்றனர். ஆனால், விதை நெல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் சி.ஆர். ஆடுதுறை 36 உள்ளிட்ட விவசாயிகள் விரும்பும் விதை நெல்லை வேளாண் துறை அலுவலர்கள் மூலம் தட்டுப்பாடு இல்லாமல் வினியோகிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

போதுமான இருப்பு இல்லை

பள்ளத்தான்மனையை சேர்ந்த விவசாயி விஜயன்:- புதுக்கோட்டை மாவட்டத்தில், கறம்பக்குடி அறந்தாங்கி, மணமேல்குடி, ஆவுடையார்கோவில் ஆகிய தாலுகாக்களில் சுமார் 1 லட்சம் ஏக்கருக்கு மேல் நேரடி நெல் விதைப்பு முறையில் சாகுபடி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மற்ற பகுதிகளிலும் விதைப்பு பணிகள் பரவலாக நடைபெற்று வருகிறது.

ஆனால் விதை நெல் விவசாய டெப்போக்களில் போதுமான அளவு இருப்பு இல்லை. இதனால் தனியாரிடம் விதை நெல் வாங்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு உள்ளனர். கூடுதல் விலை கொடுப்பதோடு விதை நெல்லின் தரமும் சரியாக இருப்பது இல்லை. எனவே நேரடி நெல் விதைப்பிற்கு போதுமான விதை நெல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விதை நெல்லுக்கு தட்டுப்பாடு

ஊரணிபுரத்ைத சேர்ந்த அய்யாமாரிமுத்து:- காவிரியில் போதுமான அளவு தண்ணீர் வராததால் புதுக்கோட்டை மாவட்டத்தில் குறுவை சாகுபடி பொய்த்து போய்விட்டது. சம்பா சாகுடியாவது கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் பலரும் பணிகளை தொடங்கி உள்ளனர். தற்போது நேரடி நெல் விதைப்பு பணி நடைபெற்று வருகிறது.

ஆனால் விதை நெல்லுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. குறுவை தொகுப்பு உள்ளிட்ட எந்த சலுகைகளும் இல்லாத புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கு விதை நெல்லாவது தட்டாடு இன்றி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

வேளாண் விரிவாக்க மையங்களில் விற்பனை

மேட்டுப்பட்டியை சேர்ந்த ரெங்கநாதன்:- சம்பா சாகுபடிக்கு அடுத்த மாதத்துக்கு பின்னர் தான் நாற்று முறையில் நடவுப்பணி தொடங்கும். தற்போது நேரடி நெல் விதைப்பு பகுதிகளில் விதை நெல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தனியார் விதைக் கடைகளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், பல கடைகளில் முளைப்புத்திறன் இல்லாத தரமற்ற விதைகளும் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து வேளாண்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து, தரமான விதைகளை தட்டுப்பாடு இல்லாமல் வேளாண் விரிவாக்க மையங்களில் விற்பனை செய்ய வேண்டும்.

நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது

இதுகுறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் கூறியதாவது:- மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் விதை நெல் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. சில மையங்களில் குறிப்பிட்ட ரக நெல் விதைகள் இல்லை என்றாலும், விவசாயிகளின் தேவையின் அடிப்படையில் மற்ற மையங்களில் இருந்து விதை நெல் வாங்கி வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்