பிராட்வே கட்டிட விபத்தில் யாரும் சிக்கவில்லை - அமைச்சர் கே.என்.நேரு
பிராட்வே கட்டிட விபத்தில் யாரும் சிக்கவில்லை என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை பிராட்வே அரண்மனைக்காரன் தெருவில் உள்ள பழமையான நான்கு மாடி கட்டிடம் இன்று இடிந்து விழுந்தது. இந்த கட்டிட விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், தீயணைப்பு, தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த கட்டிட விபத்தில் தொழிலாளர்கள் சிலர் சிக்கி இருக்கலாம் என்று முதற்கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், கட்டிட விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று மீட்புப்பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, கட்டிட விபத்தில் தொழிலாளர்கள் யாரும் சிக்கவில்லை என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், இந்த கட்டிடம் 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடம். கட்டிட விபத்தில் யாரும் சிக்கவில்லை. கட்டிட இடிபாடுகளுக்குள் 4 தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாக முதலில் வெளியான தகவல் வதந்தி. கட்டிட விபத்தில் யாரும் சிக்கவில்லை. கட்டிட விபத்தில் மீட்புப்பணியில் ஈடுபட்டவர்கள் 2 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டிட கழிவுகள் இன்னும் 3 மணி நேரத்தில் முழுமையாக அகற்றப்படும்' என்றார்.