'மதத்தை ஒழிப்பேன் என்று சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை' மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேட்டி

அரசியல் சாசன உறுதிமொழியை எடுத்துக்கொண்டு மதத்தை ஒழிப்பேன் என்று சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

Update: 2023-09-16 14:10 GMT

சென்னை,

சென்னை எம்.ஆர்.சி. நகரில் நடைபெற்ற கணக்கு தணிக்கையாளர்கள் அமைப்பின் 90-வது ஆண்டு விழாவில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தமிழகத்தில் சமீப காலமாக சனாதனம் தொடர்பான கருத்துகள் பல்வேறு விதமாக பேசப்படுகிறது. உண்மையில் சனாதனம் என்றால் என்ன?.

பதில்:- அரசியல் சாசனப்படி, உறுதிமொழி எடுத்துக் கொண்டு அமைச்சராக பொறுப்பு ஏற்கிறோம். அப்படி இருக்கும்போது, என்னதான் நமது கொள்கை என்றாலும், ஏதோ ஒரு மதத்தை ஒழிப்பேன் என்று சொல்வதற்கான அதிகாரம் யாருக்கும் இல்லை. முக்கியமாக அமைச்சருக்கு அது இல்லவே இல்லை. ஒரு பொது மேடையில் இருந்து கொண்டு ஒழிக்கப்போகிறேன் என்று சொன்னால், அது ரொம்ப தப்பு. அப்படி ஒழிப்பேன் என்று சொல்லவில்லை என்று இப்போது சொல்வது பொருந்தாது. சனாதனத்தை எதிர்க்கும் மாநாடு இது இல்லை, ஒழிக்கின்ற மாநாடு என்று கூறினார். அமைச்சராக இருப்பவர் பொறுப்பாக பேச வேண்டும். அதே மேடையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவும் இருந்திருக்கிறார்'இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்