அம்முண்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு ஒருவர்கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை

காட்பாடி ஊராட்சி ஒன்றியம் அம்முண்டி ஊராட்சியில் தலைவர் பதவிக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாமல், பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

Update: 2022-06-28 12:57 GMT

காட்பாடி ஊராட்சி ஒன்றியம் அம்முண்டி ஊராட்சியில் தலைவர் பதவிக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாமல், பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

ஒருவர்கூட மனுதாக்கல் செய்யவில்லை

வேலூர் மாவட்டம், காட்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அம்முண்டி ஊராட்சி தலைவர் பதவி தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. பொதுப்பிரிவினர் அதிகம் வசிக்கும் பகுதியில் தாழ்த்தப்பட்டோருக்கு தலைவர் பதவி ஒதுக்கீடு செய்ததால் கடந்த முறை நடந்த உள்ளாட்சி தேர்தலை பொதுமக்கள் புறக்கணித்தனர். தலைவர் பதவியை பொதுப் பட்டியலுக்கு மாற்றும் வரை தேர்தலை புறக்கணிக்கப் போவதாக பொதுமக்கள் அறிவித்து இருந்தனர். இதனால் அம்முண்டி ஊராட்சியில் தேர்தல் நடைபெறவில்லை.

இந்த நிலையில் தேர்தல் நடைபெறாமல் காலியாக உள்ள ஊராட்சி தலைவர், ஊராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தல் தற்போது நடைபெறுகிறது. அதன்படி அம்முண்டி ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. வேட்புமனு தாக்கலுக்கு 27-ந் தேதி கடைசி நாளாகும். காட்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அம்முண்டி ஊராட்சித் தலைவர் பதவிக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அதேபோல் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

தேர்தல் புறக்கணிப்பு

இதுகுறித்து அம்முண்டி கிராம பொதுமக்கள் கூறுகையில், அம்முண்டி ஊராட்சி தலைவர் பதவி பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தோம். ஆனால் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. 2-வது முறையும் பொதுப் பிரிவினர் அதிகமாக உள்ள கிராமத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு செய்துள்ளனர். தலைவர் பதவி பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யும் வரை நாங்கள் தேர்தலை புறக்கணிப்போம் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்