அரசுக்கு எவ்வளவு கடன் இருந்தாலும் அ.தி.மு.க. ஆட்சியில் மின்கட்டணம் உயர்த்தப்படவில்லை

அரசுக்கு எவ்வளவு கடன் இருந்தாலும் அ.தி.மு.க. ஆட்சியில் மின்கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறினார்.

Update: 2022-07-21 20:52 GMT

நாமக்கல்,

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்படவில்லை. தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் மின்சாரம் கணக்கீடு செய்யப்படும் என்று அறிவித்து ஆட்சிக்கு வந்து ஓராண்டில் மின்சார கட்டணத்தை உயர்த்துகிறது.

ஒரு வீட்டுக்கு ஒரு இணைப்பு என்று அறிவித்துள்ளனர். இதனால் ஒரே வீட்டில் தாய், தந்தை ஒரு பகுதியிலும், மகன், மருமகள் மற்றொரு பகுதியிலும் வசித்து 2 மின் இணைப்பு வைத்திருந்தால் அவை ஒன்றாக்கப்படும். இதன்மூலம் 100 யூனிட் இலவச மின்சாரம் பெறும் வாய்ப்பை இழக்க நேரிடும். இவ்வாறு தமிழகத்தில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிக்கப்படுவார்கள்.

ரூ.13 ஆயிரம் கோடி

மின்கட்டண உயர்வுக்கு மத்திய அரசே காரணம் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறுகிறார். மத்திய அரசும், வங்கிகளும் நஷ்டத்தில் உள்ள அரசு நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்காக அடிக்கடி இதுபோன்ற கடிதம் எழுதுவார்கள். ஆட்சியில் உள்ளவர்கள் தான் அதை சமாளிக்க வேண்டும். மின்வாரிய கடனை அடைக்க ஆண்டுக்கு ரூ.13 ஆயிரம் கோடி, மின்வாரியத்திற்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்தது.

ஆனால் ரூ.3 ஆயிரம் கோடிதான் கொடுக்கப்பட்டது. ரூ.13 ஆயிரம் கோடி கொடுத்திருந்தால், மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.

மின்கட்டணம் உயர்த்தவில்லை

அமைச்சர் செந்தில் பாலாஜி அ.தி.மு.க. ஆட்சியில் கடன் ஏற்படுத்திவிட்டார்கள். அதனால்தான் மின் கட்டணத்தை உயர்த்துகிறோம் என்று கூறுகிறார். எவ்வளவு கடன் இருந்தாலும், கடந்த 5 ஆண்டுகளில் மக்களின் நிலையை உணர்ந்து மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்