எத்தனை இணைப்பு இருந்தாலும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும் -அமைச்சர் பேட்டி
மின்இணைப்பு தாரர்கள் எத்தனை இணைப்பு வைத்திருந்தாலும் அவர்களுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும், அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் ராயப்பேட்டை பாலம் அருகில் உள்ள மின்சார வாரிய கட்டணம் செலுத்தும் மையத்தில் மின்சார இணைப்பு பெற்ற நுகர்வோர்களின் ஆதார் எண்ணை மின்சார இணைப்பு எண்ணுடன் இணைக்கும் பணி நடந்தது. அதனை, மின்சார வாரியத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-
மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான பணிகள் ஏற்கனவே மின்சார வாரியத்தால் தொடங்கப்பட்டன. இதுவரை 15 லட்சம் மின்இணைப்பு தாரர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர். இதுகுறித்து விரிவான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். வாரியத்தின் கீழ் செயல்படும் 2 ஆயிரத்து 811 பிரிவு அலுவலகங்களில் இன்று (நேற்று) தொடங்கி வருகிற டிசம்பர் 31-ந்தேதி வரை மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த முகாம்களில், பண்டிகை நாட்கள் தவிர்த்து, ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாட்களும் பிரிவு அலுவலகங்களில் இதற்கான பணிகள் நடக்கிறது. பொதுமக்கள் இதனை நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இலவச திட்டங்கள் தொடரும்
வாரியம் மூலம் அரசு மானியம் வழங்கி 100 யூனிட் உள்ளாக பயன்படுத்தப்படும் குடிசைகள், ஏற்கனவே வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரமாக இருந்தாலும் சரி, கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களாகான இலவச மின்சாரமாக இருந்தாலும் சரி, விவசாய மின் இணைப்பாக இருந்தாலும் சரி, ஏற்கனவே அரசின் அனைத்து இலவச மின் திட்டங்கள், மானியங்கள் வழங்கப்படும் திட்டங்களுக்கான நடைமுறைகள் பின்பற்றப்படும். அதேநிலையில் தான் இருக்கும். அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் உண்மைக்கு மாறாக ஆதார் எண்ணை மின்இணைப்புடன் இணைத்தால் இந்த திட்டங்கள் ரத்து செய்யப்படும் என்று தவறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகிறது.
எவ்வளவு பேர் சொந்த வீட்டில் குடியிருக்கிறார்கள்?, எவ்வளவு பேர் வாடகை வீட்டில் குடியிருக்கிறார்கள்? என்றும், ஒருவர் பெயரில் எத்தனை மின் இணைப்புகள் இருக்கிறது?, எந்தவித தரவுகளும் மின்வாரியத்தில் இல்லை. சுமார் 1 கோடியே 15 லட்சம் மின்இணைப்புதாரர்களின் தரவுகள் மட்டுமே இருந்தன. மின்சார வாரியத்தை மேம்படுத்த வேண்டும். அதேபோல் புதிய தொழில் நுட்பத்தின் அடிப்படையில் வாரியத்தை நவீனப்படுத்துவதற்காக மின்இணைப்பையும், ஆதார் எண்ணையும் இணைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
ஒரே ஆதார் எண்ணில் 10 இணைப்புகள்
ஒரு இணைப்புக்கு தான் 100 யூனிட் இலவச மின்சாரம் தருவார்கள் என்று பொதுமக்களிடம் இருக்கும் தவறான கருத்து தேவையற்றது. மின்இணைப்பு தாரர்கள் 4 அல்லது 5 இணைப்பு வைத்திருந்தாலும் அவர்களுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். அதில் எந்த மாற்றமும் இல்லை. டிசம்பர் 31-ந்தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டு உள்ளதால் பணம் கட்டுவதில் எந்த பாதிப்பும் இல்லை. ஒரே ஆதார் எண்ணில் 10 இணைப்புகள் இருந்தாலும் இணைத்து கொள்ளலாம். காலஅவகாசம் இருப்பதால் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை பொறுமையாக செய்யலாம். அவசரப்பட வேண்டியதில்லை. பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது.
வாரியம் ரூ.1.59 லட்சம் கோடி கடனில் உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் ரூ.16 ஆயிரத்து 511 கோடி வட்டி மட்டும் கட்டப்பட்டு உள்ளது. மின்சார வாரியத்தின் இழப்புகளை சரிசெய்யவும், வாரியத்தை மேம்படுத்தவும் இதுபோன்ற பணிகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளது. இலவச மின்சாரம் பெறும் விவசாயிகளும் தங்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மின்சார வாரிய இயக்குனர் சிவலிங்க ராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். சென்னை மாநகரில் உள்ள மின்சார வாரிய அலுவலகங்களில் நடந்த முகாம்களில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஒரு சில இடங்களில் சர்வர் பிரச்சினையால் ஆதார் எண்ணை இணைப்பதில் காலதாமதமும் ஏற்பட்டது.