பராமரிப்பு இல்லை; பாதுகாப்பு குறைபாடு:பூட்டிக் கிடக்கும் தாய்மார்கள் பாலூட்டும் அறைகள்:மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா?

பராமரிப்பு இன்றியும், பாதுகாப்பு குறைபாட்டாலும் பஸ் நிலையங்களில் தாய்மார்கள் பாலூட்டும் அறைகள் பூட்டிக் கிடக்கின்றன. இதனை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Update: 2023-01-01 18:45 GMT


தாய்ப்பால்

குழந்தைகளுக்கு ஒரு வயது வரை தாய்ப்பால் கட்டாயம் கொடுக்க வேண்டும். அப்போது தான் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், நோய் எதிர்ப்பு சக்தியுடனும் வளர்வார்கள் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். பழங்காலத்தில் பெண்கள் பெரும்பாலும் வீடுகளிலேயே இருந்ததால் 2 வயது வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது வழக்கம். ஆனால், தற்போது அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதனை படைத்து முன்னேறி வருகின்றனர். இதனால் பணி நிமித்தமும், பயணங்கள் காரணமாகவும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில் சிரமங்கள் ஏற்படுகிறது.

பஸ் நிலையங்களில் பஸ்சுக்காக காத்திருக்கும் நேரங்களில் குழந்தைகள் பசியால் அழும் போது தாய்ப்பால் கொடுக்க முடியாமல் பெண்கள் சிரமப்பட்டு வந்தனர். கூட்டம் நிரம்பி வழியும் பஸ் நிலையத்தில் மறைவான இடம் தேடிச் சென்றாலும் பாதுகாப்பு இல்லை என்பதால் பெரும்பாலான பெண்கள் பச்சிளம் குழந்தைகளுக்கும் புட்டிப்பால் கொடுக்க பால் டப்பாக்களை எடுத்துச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டனர்.

பாலூட்டும் அறைகள்

தாய்மார்களின் இதுபோன்ற சிரமங்களை கருத்தில் கொண்டும், குழந்தைகளின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டும் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2015-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் பஸ் நிலையங்களில் தாய்மார்கள் பாலூட்டும் அறைகளை அமைக்க உத்தரவிட்டார். அதன்படி தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி, போடி, சின்னமனூர், தேவாரம், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் ஆகிய பஸ் நிலையங்களில் தாய்மார்கள் பாலூட்டும் அறைகள் அமைக்கப்பட்டன.

மின்விளக்கு, மின்விசிறி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் பாலூட்டும் அறைகள் அமைக்கப்பட்டன. தாய்மார்களுக்கு இது மிகவும் பயன் அளிப்பதாக இருந்தது. தொலைதூர பயணம் மேற்கொண்ட தாய்மார்கள் தங்களின் குழந்தைகளுக்கு இந்த அறைகளுக்கு சென்று தாய்ப்பால் ஊட்டினர்.

பூட்டிக் கிடக்கின்றன

ஆனால், நாளடைவில் இந்த பாலூட்டும் அறைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. தேனி மாவட்டத்தில் தற்போது கம்பம் பஸ் நிலையத்தில் மட்டும் பெயரளவுக்கு இந்த அறை செயல்படுகிறது. தமிழக-கேரள மாநில எல்லையில் உள்ள கூடலூரில் பூட்டியே கிடக்கிறது.

தேனியில் பழைய பஸ் நிலையம், கர்னல் ஜான் பென்னிகுயிக் பஸ் நிலையம் ஆகிய 2 இடங்களிலும் பாலூட்டும் அறை அமைக்கப்பட்டது. பென்னிகுயிக் பஸ் நிலையத்தில் குமுளி பஸ்கள் நிற்கும் இடத்தில் அமைக்கப்பட்டது. பராமரிப்பு இன்றியும், அதற்கு வெளியே புகை பிடிப்பது, கஞ்சா புகைப்பது போன்ற செயல்களில் பலர் ஈடுபடுவதாலும் இதற்கு அருகில் செல்லவே பெண்கள் அச்சப்படும் சூழல் உள்ளது. பராமரிப்பு இல்லாதது மற்றும் பாதுகாப்பு குறைபாடு காரணமாக இது பயன்பாடு இன்றி உள்ளது.

அதுபோல் பழைய பஸ் நிலையத்தில் அம்மா உணவகம் அருகில் பாலூட்டும் அறை அமைக்கப்பட்டது. தற்போது அந்த அறை எங்கே இருக்கிறது என்று தேடும் அளவுக்கு அதை சுற்றிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. பஸ் நிலையத்தில் பாதாள அறை இருந்தால் கூட கண்டுபிடித்துவிடலாம், பாலூட்டும் அறையை அவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்க முடியாது என்ற நிலைமைக்கே சென்று விட்டது. இதுவும் சமூக விரோதிகளின் கூடாரமாகவே மாறியுள்ளதாக கூறப்படுகிறது.

பாதுகாப்பு குறைபாடு

போடியில் பாலூட்டும் அறை அருகில் பயணிகள் தங்கும் அறை உள்ளது. அங்கு மதுபோதையில் பலர் படுத்துக் கொள்வதால் பாதுகாப்பு குறைபாடு காரணமாக பாலூட்டும் அறை பூட்டிக் கிடக்கிறது. தற்போது அது பாழடைந்த கட்டிடமாக காட்சி அளிக்கிறது. அதுபோல், பெரியகுளம், ஆண்டிப்பட்டி, உத்தமபாளையம், சின்னமனூர் பஸ் நிலையங்களிலும் பாலூட்டும் அறைகள் காட்சிப் பொருளாகவே உள்ளன.

எனவே, பஸ் நிலையங்களில் பயன்பாடின்றி கிடக்கும் பாலூட்டும் அறைகளை பராமரித்து, பாதுகாப்பான சூழலில் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது.

இதுதொடர்பாக சின்னமனூரை சேர்ந்த விஜி கூறுகையில், "தாய்மார்கள் பாலூட்டும் அறைகள் பஸ் நிலையங்களில் அமைக்கப்பட்டதால் கைக்குழந்தைகளுடன் வெளியூர் செல்லும் போது பயனுள்ளதாக இருந்தது. அடிப்படை வசதிகள் எல்லாம் அங்கு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது பராமரிப்பு இன்றி காட்சிப் பொருளாக உள்ளது.

பொது இடங்களில் பெண்கள் நடந்து சென்றாலே புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றும் அளவுக்கு சமூக விரோதிகள் சிலர் செல்போன்களுடன் உலா வருவதாக கேள்விப்படும் போது அச்சமாக உள்ளது. எனவே, பாலூட்டும் அறைகளை மீண்டும் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். பஸ் நிலையங்களில் பாலூட்டும் அறையை புறக்காவல் நிலையம், போக்குவரத்து கழக அலுவலகம் போன்றவற்றுக்கு அருகில் அமைத்தால் பாதுகாப்பாக உணர முடியும்" என்றார்.

போதை ஆசாமிகள் அட்டகாசம்

சீப்பாலக்கோட்டையை சேர்ந்த பாண்டிச்செல்வி கூறுகையில், "பஸ் நிலையங்களில் தாய்மார்கள் பாலூட்டும் அறை அமைத்தது மிகவும் நல்ல திட்டம். ஆனால், சின்னமனூரில் அமைத்த நாளில் இருந்தே முழுமையாக பயன்பாட்டுக்கு வரவில்லை. பூட்டியே கிடப்பதோடு, அதன் முன்பு மது அருந்துதல், சிறுநீர் கழித்தல் போன்ற சம்பவங்கள் நடக்கிறது. இதனால், அதன் பக்கம் செல்லவே பெண்கள் அச்சப்படும் சூழல் உள்ளது. எனவே இதை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதோடு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்து கொடுக்க வேண்டும்" என்றார்.

உத்தமபாளையத்தை சேர்ந்த குடும்பத்தலைவி அருணா கூறுகையில், "உத்தமபாளையம் பஸ் நிலையத்துக்கு பல்வேறு கிராமப்புற பகுதிகளில் இருந்து மக்கள் வந்து செல்கின்றனர். பஸ் நிலையத்தில் பெண்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை. தாய்மார்கள் பாலூட்டும் அறை மூடப்பட்டுள்ளது. இப்பகுதியில் போதை ஆசாமிகள் அட்டகாசம் செய்வதால் பெண்கள் அச்சத்துடன் பஸ்களுக்கு காத்திருக்க வேண்டிய நிலைமை உள்ளது. பாலூட்டும் அறையை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதோடு, இப்பகுதியில் பெண் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்