ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் எந்த பாரபட்சமும் காட்டப்படாது மாநகராட்சி மேயர் மகேஷ் பேட்டி
நாகர்கோவில் மாநகரப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு எந்தவித பாரபட்சமின்றி அகற்றப்படும் என மேயர் மகேஷ் பேட்டி அளித்துள்ளார்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகரப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு எந்தவித பாரபட்சமின்றி அகற்றப்படும் என மேயர் மகேஷ் பேட்டி அளித்துள்ளார்.
மாநகர வளர்ச்சி பணிகள்
நாகர்கோவில் மாநகர பகுதியில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து மேயர் மகேஷ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாகர்கோவில் மாநகராட்சிக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.74.54 கோடி வளர்ச்சி திட்டங்களை தந்துள்ளார்.
அந்த வகையில் நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ரூ.31 கோடி செலவில் சாலை பணி நடந்து வருகிறது. தற்போது இந்த பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.
சாலைகள் அழகு படுத்தும் பணி
நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ஒருவருக்கு தினமும் 135 லிட்டர் குடிநீர் கிடைக்கும் வகையில் ஆம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.296 கோடியில் வேலை நடந்து வருகிறது. அந்தப் பணியும் முடியும் தருவாயில் உள்ளது. நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாநகரப் பகுதியில் கோர்ட்டு ரோடு, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை ஆகிய சாலைகள் ரூ.3.50 கோடியில் அழகுப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சரலூர் மீன் சந்தையில் ரூ.1.5 கோடி செலவில் நவீன வணிக வளாகம் அமைக்கப்பட உள்ளது.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
வீடு இல்லாமல் சாலையோரம் தூங்குபவர்கள் தூங்கும் வகையில் ரூ.50 லட்சம் செலவில் அரங்கம் அமைக்கப்பட உள்ளது.
வலம்புரிவிளையில் உள்ள உரக்கிடங்கு பயோ மைனிங் முறையில் ரூ.10 கோடி செலவில் அகற்றும் பணி நடந்து வருகிறது. இந்த வருட இறுதிக்குள் இந்த பணிகள் முடிந்து விடும். மாநகரப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு எந்தவித பாரபட்சமின்றி அகற்றப்படும்.
மாணவர்களிடம் விழிப்புணர்வு
குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்து பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அறநிலையத்துறை கோவில்களில் சீரமைப்பு பணிகள் செய்ய ரூ.5.61 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு மேயர் மகேஷ் கூறினார். பேட்டியின்போது துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, ஆணையர் ஆனந்த் மோகன், பொறியாளர் பாலசுப்ரமணியன், நிர்வாக அதிகாரி ராம் மோகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.