அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கும் திட்டமில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-28 10:06 GMT

சென்னை,

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் சில தினங்களுக்கு முன்னதாக அதிமுக பொதுக்குழு கூடியது. அந்த பொதுக்குழுவில் பல திருப்பங்கள் நிகழ்ந்தன. அந்த பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை ரத்து செய்து ஜூலை 11-ம் தேதி மீண்டும் அதிமுக பொதுக்குழு நடைபெறும் என அறிவித்தனர்.

இந்த நிலையில் ஜூலை 11-ல் நடைபெறும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி மீண்டும் நீதிமன்றத்தை நாட பன்னீர்செல்வம் தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபால், எடப்பாடி பழனிச்சாமி தீவிர ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜு ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படும் நிலையில் கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் நடைபெற்ற அனைத்து ஆலோசனைக் கூட்டங்களிலும் கடம்பூர் ராஜு கலந்து கொண்டார்.

முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருடன் கடம்பூர் ராஜு நெருக்கமாக நின்று பேட்டி அளித்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அவர் கலந்து கொண்ட நிலையில் தற்போது அவருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது நிர்வாகிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே எடப்பாடி பழனிச்சாமியின் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்குழுவிற்கு அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பரபரப்பான சூழலுக்கு மத்தியில் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவை நடத்துவதற்கான ஏற்பாடுகளை எடப்பாடி டீம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதில், அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், அதுபோன்று ஏதாவது நடக்கும் பட்சத்தில் நீதிமன்றத்தை நாட ஓபிஎஸ் தரப்பும் திட்டமிட்டு வருகிறது.

இந்த நிலையில், பொதுக்குழுவை வேறு இடத்தில் நடத்துவதற்காக எடப்பாடி பழனிசாமி அணியினர் இடத்தை தேர்வு செய்து வருகின்றனர். ஈசிஆரில் உள்ள விஜிபி அரங்கில் அதிமுக பொதுக்குழுவை நடத்த இறுதி செய்யப்பட்டிருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இதனிடையே அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்கப்படுமா என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர்,

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கும் திட்டமில்லை, அரசு விதித்துள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுக்குழுவை நடத்தலாம். முகக்கவசம் அணிவதில் இருந்து எந்த விதிவிலக்கும் அளிக்கப்படவில்லை. 

உலகெங்கும் கொரோனா தொற்று அதிகரிப்பதால் முகக்கவசம் அணிவதில் மக்கள் ஆர்வம் காட்ட தொடங்கி உள்ளனர். தமிழகத்தில் 30-40%க்கும் மேற்பட்டவர்கள் முகக்கவசம் அணிவது மகிழ்ச்சி அளிக்கிறது.

இன்னும் இதனை கூடுதல் ஆக்கும் விதத்தில் நாளை மைலாப்பூரில் 50,000 பேருக்கு மாஸ்க் வழங்கி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த உள்ளோம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்