பாம்பன் துறைமுகத்தில் 3-வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு

பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 3-வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டதால் 7-வது நாளாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-12-25 18:45 GMT

பாம்பன், 

பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 3-வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டதால் 7-வது நாளாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து வருவதோடு இலங்கை அருகே மையம் கொண்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை தொடர்ந்து பாம்பன் துறைமுக அலுவலகத்தில் கடந்த மூன்று நாட்களாக 1-வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்த நிலையில் அது நேற்று இறக்கப்பட்டு 3-வது எண் புயல் எச்சரிக்கை கூண்டானது துறைமுக அலுவலகத்தில் ஏற்றப்பட்டது.

கடல் சீற்றம்

அதுபோல் பாம்பன் பகுதியில் தொடர்ந்து பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமாகவே காணப்பட்டு வருகின்றது. வங்க கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தை தொடர்ந்து 7-வது நாளாக ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை காரணமாக 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000-த்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் மற்றும் பைபர் படகுகளும் மீன் பிடிக்க செல்லாமல் கரையோரத்தில் உள்ள கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஒரு வாரமாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் மீன்பிடி தொழிலை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான மீனவ குடும்பங்கள் வருமானம் இன்றி தவித்து வருகின்றன. இதனால் பல கோடி ரூபாய் அந்நிய செலவாணி இழப்பும் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்