வடலூர் அருகேகார் மோதி என்.எல்.சி. தொழிலாளி சாவு
வடலூர் அருகே கார் மோதி என்.எல்.சி. தொழிலாளி உயிரிழந்தாா்.
வடலூர்,
நெய்வேலி 11-வது வட்டத்தில் உள்ள தாங்கி சாலையை சேர்ந்தவர் சத்தியபால் (வயது 57). இவர் என்.எல்.சி. 1-வது சுரங்கத்தில் நிரந்தர தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். தற்போது, வடலூர் ராகவேந்திரா சிட்டி பகுதியில் புதிதாக கட்டிவரும் வீட்டில் நடந்து வரும் பணியை நேற்று முன்தினம் நேரில் சென்று பார்த்தார். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில், நெய்வேலிக்கு புறப்பட்டார்.
அங்குள்ள வடலூர்-பண்ருட்டி தேசிய நெடுஞ்சாலையில் ஏறி திரும்பினார். அப்போது அந்த வழியாக பண்ருட்டியில் இருந்து வந்த கார், அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சத்தியபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வடலூர் போலீசார், சம்பவ இடத்துக்கு நேரில் சென்று சத்தியபால் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.