என்.எல்.சி. நிறுவனத்துக்கு எதிராக தொடர் போராட்டம்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை

என்.எல்.சி. நிறுவனம் வெளியேறாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.

Update: 2022-11-22 18:42 GMT

சென்னை,

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், என்.எல்.சி.யின், சுரங்க விரிவாக்கத்துக்கு நிலம் தர மறுத்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், நிலம் கொடுப்பவர்களுக்கு வேலை அல்லது நிதி வழங்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் ஆசை காட்டியிருக்கிறது.

நிலம் கொடுத்தவர்களுக்கு கடந்த 50 ஆண்டுகளாக ஏமாற்றத்தையும், துரோகத்தையும் மட்டுமே பரிசாக அளித்த என்.எல்.சி. நிறுவனத்தின் சார்பில் மாவட்ட கலெக்டர் கூறும் ஆசை வார்த்தைகளுக்கு கடலூர் மாவட்ட மக்கள் ஏமாற மாட்டார்கள்.

50 ஆண்டுகளாக தங்களை சுரண்டிய என்.எல்.சி. இப்போது தங்கள் மீது அக்கறை காட்டுவதை போல நாடகமாடுவதை மக்கள் நம்ப மாட்டார்கள்; அவர்கள் என்.எல்.சி. மீது நம்பிக்கையிழந்து விட்டனர். கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்களின் வழிகாட்டுதலில் தான் அனைத்து பணிகளும் நடப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இதே அமைச்சர்கள் தான் தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக என்.எல்.சி. நிறுவனத்துக்கு எதிராக போராட்டங்களை நடத்தினார்கள். ஆனால், இப்போது என்.எல்.சி.க்கு ஆதரவாக களமிறங்கி இருக்கின்றனர். வாக்களித்த மக்களின் நலன்களுக்கு எதிராக இரட்டை நிலைப்பாடு எடுத்துள்ள அவர்கள் மீதும் மக்கள் நம்பிக்கையிழந்து விட்டனர். அவர்களின் முயற்சிகள் பலிக்காது.

சீரழிவு

நெய்வேலியில் எடுக்கப்படும் பழுப்பு நிலக்கரி எரிதிறன் குறைந்தது என்பதால் சுற்றுச்சூழலுக்கு கூடுதல் கேட்டை விளைவிக்கும். புவிவெப்பமயமாதலை கட்டுப்படுத்த படிம எரிபொருள் பயன்பாட்டை குறிப்பிட்ட கால அளவுக்குள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த ஒரு காரணத்துக்காகவே என்.எல்.சி. நிறுவனத்தை மூட வேண்டும். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் கடந்த 60 ஆண்டுகளாக நிலத்தடி நீரை உறிஞ்சி நீர்மட்டத்தை 1,000 அடிக்கும் கீழே தள்ளியுள்ளது. ஒட்டுமொத்த கடலூர் மாவட்டத்தின் சுற்றுச்சூழலையும் சீரழித்து பாலைவனமாக்கி வருகிறது.

என்.எல்.சி. நிறுவனத்தால் பழுப்பு நிலக்கரி மற்றும் பிற தாதுக்கள் வெட்டி எடுக்கப்பட்டதால் ஏற்பட்ட மோசமான விளைவுகளை கருத்தில்கொண்டு பார்க்கும்போது, ஒட்டுமொத்த கடலூர் மாவட்டமும் பாதிக்கப்பட்ட பகுதியாக கடலூர் மாவட்ட தாது அறக்கட்டளையால் அடையாளம் கண்டு அறிவிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

கடலூர் மாவட்டத்தை அழித்துக்கொண்டிருக்கும் என்.எல்.சி. நிறுவனம் தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவது தான் அனைத்து வகை சிக்கல்களுக்கும் தீர்வு. அதன் மூலம் தான் கடலூர் மாவட்டத்தை சீரழிவிலிருந்து காப்பாற்ற முடியும்.

தொடர் போராட்டம்

என்.எல்.சி. நிறுவனத்துக்கு நிலம் கொடுக்கும்படி மக்களை நெருக்கடிக்குள்ளாக்க கடலூர் மாவட்ட கலெக்டரோ, நிர்வாகமோ முயன்றால் அதை பா.ம.க. வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது.

கடலூர் மாவட்டத்தையும், கடலூர் மாவட்ட மக்களையும் காப்பாற்றுவதற்காக என்.எல்.சி.யை வெளியேற்ற வலியுறுத்தி தொடர் போராட்டங்களை எனது தலைமையில் பா.ம.க. முன்னெடுக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்