நீலகிரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு தொடக்கம்-கலெக்டர் அம்ரித் நேரில் ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி சிறப்பு முகாம்களில் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இந்த முகாமை கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2023-07-25 01:00 GMT

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி சிறப்பு முகாம்களில் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இந்த முகாமை கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மகளிர் உரிமைத்தொகை திட்டம்

தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறும் முகாம்களை 2 கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் 403 ரேஷன் கடைகளில் 2,20,473 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இதில் ஒரு கடை உள்ள பகுதியில் ஒரு முகாம் என்ற அடிப்படையில் முதற்கட்டமாக 204 சிறப்பு முகாம்களும், 2-ம் கட்டமாக 200 சிறப்பு முகாம்களும் என மொத்தம் 404 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இதற்காக 2,22,685 விண்ணப்பங்கள் நீலகிரிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த பணியினை மேற்கொள்ள 631 இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களும் 120 ரிசர்வ் தன்னார்வலர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஏற்கனவே அவர்களுக்கு 2 நாட்கள் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 404 முகாம்களில் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் 404 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை உதவி மைய தன்னார்வலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து கூட்டுறவு துறையின் சார்பில் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் 18-ந் தேதி முதல் நாள், இடம் மற்றும் நேரம் ஆகியவை குறிப்பிட்டு டோக்கன் வீடு வீடாக சென்று குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பணி நடந்து வந்தது.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் நேற்று முதல் சிறப்பு முகாம்களில் விண்ணப்பம் பதிவு செய்யும் பணி தொடங்கியது.

கலெக்டர் ஆய்வு

ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், ஒய்.எம்.சி.ஏ., நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முதற்கட்ட சிறப்பு முகாமை கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முதற்கட்ட சிறப்பு முகாம் 204 இடங்களில் இன்று (நேற்று) முதல் தொடங்கி வருகிற 4-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த முகாம்களில் பொதுமக்கள் எந்தவித சிரமமுமின்றி வந்து விண்ணப்பம் பதிவு செய்யும் வகையில், காலை 30 விண்ணப்பங்களும், மாலையில் 30 விண்ணப்பங்களும் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் ஏ, பி அல்லது சி என 3 நிலைகளில் ஏதேனும் ஒரு நிலையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதற்கான ஒப்புகை சீட்டு வழங்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் குறிப்பிட்ட இடம், நாள் மற்றும் நேரத்தில் முகாம்களுக்கு வந்து விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். அனைவரின் விண்ணப்பங்களும் பெறும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, ஆர்.டி.ஓ. துரைசாமி, ஊட்டி நகராட்சி ஆணையாளர் ஏகராஜ், தாசில்தார் சரவணக்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

கோத்தகிரி

கோத்தகிரி பகுதியில் சுமார் 30 க்கும் மேற்பட்ட மையங்களில் நேற்று விண்ணப்பங்களை பதிவேற்றும் பணி தொடங்கி நடைபெற்றது. இந்த முகாம்களில் ஏராளமான பெண்கள் காத்திருந்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து சென்றனர். மேலும் பலருடைய நியாய விலை அட்டையில் பதிவு செய்திருந்த மொபைல் எண் தொலைந்து போயிருந்தததால் மீண்டும் வேறு எண்ணை மாற்றுவதற்காக வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பித்ததைக் காண முடிந்தது.

Tags:    

மேலும் செய்திகள்