கைதான 5 பேரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை

கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் கைதான 5 பேரிடம் கோவையில் வைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களை குன்னூர், சத்தியமங்கலத்துக்கு அழைத்து செல்ல முடிவு செய்து உள்ளனர்.

Update: 2023-03-10 18:45 GMT

கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் கைதான 5 பேரிடம் கோவையில் வைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களை குன்னூர், சத்தியமங்கலத்துக்கு அழைத்து செல்ல முடிவு செய்து உள்ளனர்.

கார் வெடிப்பு

கோவையில் கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் வெடித்து சிதறியது. இதில் காருக்குள் இருந்த அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் (வயது 29) சம்பவ இடத்திலேயே பலியானார். இதைத் தொடர்ந்து போலீசார் அவருடைய வீட்டில் சோதனை நடத்தி வெடிமருந்துகள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.

பின்னர் இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு (தேசிய புலனாய்வு முகமை) மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக முகமது அசாருதீன், அப்சர்கான், பெரோஸ்கான், உமர்பாரூக், பெரோஸ் இஸ்மாயில், நவாஸ் இஸ்மாயில் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

காவலில் விசாரிக்க அனுமதி

பின்னர் அவர்கள் அனைவரும் சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் கைதான முகமது அசாருதீன், பெரோஸ் இஸ்மாயில், நவாஸ் இஸ்மாயில், பெரோஸ்கான், உமர்பாரூக் ஆகிய 5 பேரையும் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டு நேற்று முன்தினம் அனுமதி அளித்தது.

முக்கிய தகவல் கிடைத்தது

இதையடுத்து முகமது அசாருதீன், உமர்பாரூக் உள்பட 5 பேரை யும் போலீசார் காவலில் எடுத்தனர். பின்னர் அவர்களை விசார ணைக்காக நேற்று காலை 7.50 மணிக்கு பலத்த பாதுகாப்பு டன் வாகனத்தில் கோவைக்கு அழைத்து வந்து மாநகர போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவையில் நடந்த கார் வெடிப்பு, மங்களூரு குக்கர் குண்டு வெடித்த சம்பவத்துக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்று அறிவிப்பு வெளியிட்டது. அது தொடர்பாக 60 பக்கம் கொண்ட தகவலையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது. இது தொடர்பாக அந்த 5 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அதில் சில முக்கிய தகவல்கள் கிடைத்து உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

குன்னூர், சத்தியமங்கலம்

கைதான 5 பேரையும் ஏற்கனவே 2 முறை காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. இது 3-வது முறை நடத்தப்படும் விசாரணை ஆகும். உயிரிழந்த ஜமேஷா முபின் தலைமையில் குன்னூர், சத்தியமங்கலம் வனப்பகுதியில் நடந்த ரகசிய கூட்டத்தில் இந்த 5 பேரும் பங்கேற்று உள்ளனர். எனவே அவர்களை அந்த பகுதிக்கு அழைத்து செல்லப்்பட உள்ளனர்.

அந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் யார்? அதில் எடுக்கப் பட்ட முடிவுகள் என்ன? எது தொடர்பாக பேசப்பட்டது? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. இதற்காக அவர்களை குன்னூர், சத்தியமங்கலம் வனப்பகுதிக்கும் அழைத்து செல்லப்பட உள்ளனர். இதுதவிர வேறு சில இடங்களுக்கும் அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்