சிறையில் அடைக்கப்பட்டுள்ள 6 பேரிடம் என்.ஐ.ஏ. விசாரணை

கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 6 பேரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 3 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.

Update: 2022-11-04 18:45 GMT

கோவை

கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 6 பேரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 3 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.

கார் வெடிப்பு

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23-ந்தேதி அதிகாலை 4 மணியளவில் கார் வெடித்து ஜமேஷா முபின் (வயது 28) என்பவர் பலியானார். இந்த வழக்கில் முகமது அசாருதீன் (23), அப்சர்கான் (28), முகமது தல்கா (25), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (26), முகமதுநவாஸ் இஸ்மாயில் (27) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் 6 பேர் மீது உபா சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கை என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) விசாரணை நடத்தி வருகிறது.

3 மணி நேரம் விசாரணை

ஜமேஷா முபின் வீட்டில் 75 கிலோ வெடி மருந்து மற்றும் ஐ.எஸ். ஆதரவு தொடர்பான குறிப்புகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. கார் வெடிப்பு சம்பவத்தில் இறந்த ஜமேஷாமுபினுடன், அசாருதீன், அப்சர்கான் ஆகியோர் நேரடி தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் என்.ஐ.ஏ. இந்த வழக்கை விசாரணை நடத்தி வருவதால், சென்னையில் உள்ள பூந்தமல்லி கோர்ட்டில் அனுமதி பெற்று, கோவை சிறையில் உள்ள 6 பேரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை சுமார் 3 மணி நேரம் நடந்ததாக கூறப்படுகிறது.

ஐ.எஸ். தொடர்பு, வெடி மருந்து வாங்க பணம் கொடுத்தவர்கள் யார்? உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து 6 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடந்தப்பட்டு, அந்த தகவல்களை பதிவு செய்து கொண்டனர்.

காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

இந்த 6 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 6 பேரிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து அவர்களது வீடுகளிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்