கோவையில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் முகாம்

கோவையில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் முகாம்

Update: 2022-10-26 18:45 GMT

கோவை

கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தேசிய புலனாய்வு முகமை டி.ஐ.ஜி. தலைமையிலான என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவையில் முகாமிட்டுள்ளனர். முதல்கட்டமாக வழக்கு விவரம் குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

கோவை சம்பவம்

கோவையில் கடந்த 23-ந் தேதி கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் அருகே காரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் அந்த காரில் வந்த கோவை கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் (வயது 29) உயிரிழந்தார். கார் வெடித்த இடத்தில் இரும்பு ஆணிகள், இரும்பு குண்டுகள் சிதறி கிடந்தன. கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்த உக்கடத்தை சேர்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது உபா (சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம்) சட்டமும் பாய்ந்தது.

வலைத்தளத்தில் ஆய்வு

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த ஜமேஷா முபினுக்கு பலருடன் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மேலும் 20-க்கும் மேற்பட்டவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் யார்? யாரிடம் பேசினார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதுபோன்று ஜமேஷா முபின் மற்றும் உபா சட்டத்தில் கைதான 5 பேர் யாரிடம் எல்லாம் தொடர்பு வைத்து இருந்தனர் என்பதை குறித்து அறிய அவர்களின் இ-மெயில், வாட்ஸ்-அப், முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வலைத்தளத்தையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

என்.ஐ.ஏ. அதிகாரிகள் முகாம்

இந்த நிலையில் கேரளாவில் இருந்து தேசிய புலனாய்வு முகமை டி.ஐ.ஜி. கே.பி.வந்தனா தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஜித் உள்பட என்.ஐ.ஏ. அதிகாரிகள் 7 பேர் நேற்று முன்தினம் இரவு கோவை வந்தனர். பின்னர் அவர்கள் நேற்று காலையில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனை சந்தித்து இந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.

தொடர்ந்து அவர்கள், இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் தனிப்படையை சேர்ந்த போலீஸ் அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டனர். இந்த சம்பவம் நடந்தது எப்படி? வெடித்த காரில் இருந்தது என்ன? என்பது பற்றியும், ஜமேஷா முபின் வீட்டில் கைப்பற்றிய பொருட்கள் குறித்தும் கேட்டறிந்தனர்.

ஆதாரங்கள் சேகரிப்பு

கோவை கார் வெடிப்பு சம்பவம் என்.ஐ.ஏ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதால், எனவே என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு, இந்த சம்பவம் தொடர்பாக முக்கிய ஆதாரங்களை சேகரித்து வருகிறார்கள்.

மேலும் கோவையில் கார் வெடித்த இடம், உயிரிழந்த ஜமேஷா முபினின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்த முடிவு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுபோன்று உபா சட்டத்தில் கைதாகி கோவை சிறையில் இருக்கும் 5 பேரிடமும் விசாரணை நடத்தவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

தீவிர விசாரணை

இந்த நிலையில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறும்போது, கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள் என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்