முதுகலை பட்டதாரி வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

பழனி அருகே முதுகலை பட்டதாரி வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Update: 2023-02-15 15:12 GMT

என்.ஐ.ஏ. அதிகாரிகள்

பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி பள்ளிவாசல் அருகில் வசித்து வருபவர் ராஜா முகமது (வயது 35). எம்.சி.ஏ. பட்டதாரியான இவர், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள தேங்காய் குடோனில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். மேலும் இவர், ஆன்லைன் மூலம் அரபி மொழி கற்று வருகிறார்.

நேற்று அதிகாலை 4 மணி அளவில் ராஜா முகமது வீட்டுக்கு, தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் 7 பேர் வந்தனர். பின்னர் அவர்கள், உள்பக்கமாக கதவை பூட்டி கொண்டனர். வீட்டில் இருந்து வெளியே செல்லவும், வீட்டுக்குள் வரவும் யாரையும் அனுமதிக்கவில்லை.

7 மணி நேரம் சோதனை

இதைத்தொடர்ந்து ராஜா முகமது வீட்டின் அனைத்து அறைகளிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் அவரது வீட்டில் இருந்து லேப்டாப், கணினி ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் வீட்டில் இருந்து புத்தகங்கள், சிம்கார்டு, செல்போன்கள் கைப்பற்றப்பட்டன. சுமார் 7 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடந்தது. காலை 11 மணி அளவில், சோதனை முடிந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் வெளியே வந்தனர். தாங்கள் கைப்பற்றிய பொருட்களை அதிகாரிகள் எடுத்து சென்றனர்.

ஆன்லைன் மூலம் அரபி மொழி கற்கிற 40 பேரின் வீடுகளிலும் நேற்று சோதனை நடந்ததாகவும், அதன்படி ராஜா முகமது வீட்டிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம், கடந்த மாதம் பழனியில் 3 நாட்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சூழ்நிலையில் நேற்று நெய்க்காரப்பட்டியில் நடத்தப்பட்ட சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்