கம்பத்தில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை:எஸ்.டி.பி.ஐ. தேனி மாவட்ட பொதுச்செயலாளர் கைது:அதிகாரிகள் காரை முற்றுகையிட்டதால் பரபரப்பு

Update: 2023-05-09 18:45 GMT

என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

தமிழகம் முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் அந்த அமைப்பில் ெதாடர்புடையவர்களின் வீடு, அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் நேற்று அதிகாலை முதல் அதிரடி சோதனை நடத்தினர்.

அதன்படி தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள கம்பம்மெட்டு காலனி பெட்ரோல் விற்பனை நிலைய சந்து பகுதியில் குடியிருந்து வரும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் சாதிக் அலி (வயது 39) என்பவரது வீட்டிலும் சோதனை நடந்தது.

தேசிய புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் பிரியா, சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கராஜ், சதீஷ் ஆகியோர் தலைமையிலான குழுவினர், அதிகாலை 4 மணி அளவில் அவரது வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அங்கு சாதிக் அலி, அவரது மனைவி, குழந்தைகள் வீட்டில் இருந்தனர். சுமார் 3 மணி நேரம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின்னர் அங்கிருந்த 3 செல்போன்களை கைப்பற்றினர்.

எஸ்.டி.பி.ஐ. நிா்வாகி கைது

இதையடுத்து சாதிக் அலியை கைது செய்து விசாரணைக்காக சென்னை தேசிய புலனாய்வு முகமைக்கு காரில் அழைத்து செல்ல முயன்றனர். இதற்கிடையே சாதிக் அலி வீட்டில் சோதனை நடப்பதை அறிந்த எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் அவரது வீட்டின் முன்பு கூடினர்.

பின்னர் அவர்கள், சாதிக் அலியை கைது செய்து அழைத்துச் சென்றபோது அதிகாரிகள் காரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முகாந்திரம் இல்லாமல் கைது செய்யக்கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதிகாரிகளிடம் கூறினர்.

இதையடுத்து கோர்ட்டு உத்தரவின்பேரில், அவரை விசாரணைக்கு அழைத்து செல்வதாக தேசிய புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் பிரியா அதற்கான ஆவணத்தை காட்டினார்.

சட்ட ரீதியாக சந்திப்போம்

அதன்பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சோதனை குறித்து சாதிக் அலியின் மனைவி சஷினி கூறுகையில், எனது கணவர் எந்த தவறும் செய்யவில்லை, அதிகாரிகளின் சோதனையில் எந்த ஆவணமும் கைப்பற்றப்படவில்லை, எனக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். எனவே எனது கணவரை விடுவிக்க வேண்டும் என்றார். இந்த சோதனையையொட்டி சாதிக் அலி வீட்டின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதற்கிடையே எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் அபூபக்கர் சித்திக் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், சாதிக் அலி வீட்டில் நடைபெற்ற என்.ஐ.ஏ. சோதனையில் எந்தவித ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை. அவரது 2 செல்போன்கள் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் இயக்கப்படும் ஆம்புலன்ஸ் வாகனத்தின் பதிவு புத்தகங்களை மட்டுமே எடுத்து செல்வதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தரப்பில் சான்றிதழ் கொடுத்தனர். எஸ்.டி.பி.ஐ. கட்சி இதுவரை தேச விரோத செயல்கள் எதிலும் ஈடுபடவில்லை. மத்திய அரசு என்.ஐ.ஏ.வை ஏவி தொடர்ந்து எங்களது அமைப்பினரை கைது செய்து வருகிறது. இதை நாங்கள் சட்ட ரீதியாக சந்திப்போம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்