என்.எல்.சி. நிலத்தை தோண்டிக் கொண்டே செல்வதால்உத்தரகாண்டின் ஜோஷிமத் நகரம் போல் நெய்வேலி பகுதிகளும் புதையும் நிலை வரலாம்மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் கவுன்சிலரின் பேச்சால் பரபரப்பு

என்.எல்.சி. நிலத்தை தோண்டிக் கொண்டே செல்வதால் உத்தரகாண்டின் ஜோஷிமத் நகரம் போல் நெய்வேலி பகுதிகளும் புதையும் நிலை வரலாம் என்று் மாவட்ட ஊராட்சிக்குழு கூடடத்தில் கவுன்சிலர் பேசியதால் பரபரப்பு நிலவியது.

Update: 2023-01-11 18:45 GMT


கடலூர் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி குழு தலைவர் திருமாறன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக்குழு செயலாளர் (பொறுப்பு) முருகன் முன்னிலை வகித்தார்.

இதையடுத்து மாவட்ட கவுன்சிலர்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசினர். அது பற்றிய விவரம் வருமாறு:-

சண்.முத்துக்கிருஷ்ணன்: கடந்த 3 ஆண்டுகளாக பலமுறை மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டம் நடந்தும், அதில் இதுவரை கவுன்சிலர்கள் கூறிய எந்தவொரு கோரிக்கைகளும் தீர்க்கப்படவில்லை. மேலும் ஏற்கனவே என்.எல்.சி. நிர்வாகம் 30 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி பயன்படுத்தி வருகிறது.

அந்த நிலங்கள் கையிருப்பில் இருந்தும், தற்போது கூடுதலாக 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த முயற்சிக்கிறது. இதில் பொதுமக்கள் விருப்பமின்றி மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் அவர்களை கட்டாயப்படுத்த கூடாது.

கஞ்சாவை ஒழிக்க நடவடிக்கை

திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலை சுற்றுலாத்தலமாக உயர்த்த வேண்டும். கரும்பு அறுவடையை முறையாக கண்காணிக்க வேண்டும். பச்சையாங்குப்பத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு மருத்துவர்கள் யாரும் வருவதில்லை. அதனால் மருத்துவமனை பாழடைந்து உள்ளது. சிப்காட் பகுதியில் சுகாதார மையம் அமைக்க வேண்டும். கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நரம்பியல் மற்றும் இருதய சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் இல்லை. அதனால் காலி பணியிடங்களில் மருத்துவர்களை நியமிக்க வேண்டும். மேலும் மாவட்டத்தில் கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை அதிகளவில் உள்ளது. இதுதொடர்பாக பலமுறை புகார் அளித்தும், இதுவரை அதனை முழுமையாக ஒழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மகாலட்சுமி: தற்போது நெற்பயிரில் அதிகளவில் பூச்சி நோய் தாக்குதல் உள்ளது. அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். என்.எல்.சி. நிர்வாகம் நிலங்களை கையகப்படுத்துவதுடன், நிலத்தை தோண்டிக் கொண்டே செல்வதால் உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத் நகரம் போல் நெய்வேலி பகுதிகளும் புதையும் நிலை வரலாம். என்.எல்.சி.யில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. (ஜோஷிமத் நகரை சுட்டிக்காட்டி பேசிய அவரது பேச்சால் பரபரப்பு ஏற்பட்டது.)

அதிகாரிகள் அலட்சியம்

சக்தி விநாயகம்: எனது வார்டு பகுதியில் சிமெண்டு சாலை அமைத்து தரக்கோரி பலமுறை மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுத்தபாடில்லை. மேலும் முறையாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி அதிகாரிகளை தொடர்பு கொண்டால், அவர்கள் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக செயல்படுகின்றனர்.

சித்ரா ராமையன்: தம்பிப்பேட்டை-பேய்க்காநத்தம் இடையே பாலம் அமைக்கக்கோரி கடந்த 3 ஆண்டுகளாக ஊராட்சிக்குழு கூட்டத்தில் கோரிக்கை விடுத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால் எங்கள் பகுதி மக்கள் நலன்கருதி உடனடியாக பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தரமில்லாத பெஞ்ச்

இதேபோல் பல கவுன்சிலர்கள் பள்ளிக்கூடங்களில் தரமில்லாத பெஞ்ச்கள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தாங்கள் 3 ஆண்டுகளாக ஊராட்சிக்குழு கூட்டத்தில் பல கோரிக்கைகள் வைத்தும், எந்தவொரு கோரிக்கைகளுக்கும் இதுவரை தீர்வு காணப்படவில்லை என குற்றஞ்சாட்டினர்.

அப்போது ஊராட்சி குழு தலைவர் திருமாறன், ஊராட்சிக்குழு செயலாளர் முருகன் ஆகியோர் கவுன்சிலர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதில் ஊராட்சிக்குழு கவுன்சிலர்கள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்