(செய்திசிதறல்) போலீஸ் எனக்கூறி முதியவரிடம் 1½ பவுன் மோதிரங்கள் அபேஸ்

போலீஸ் எனக்கூறி முதியவரிடம் 1½ பவுன் மோதிரங்களை அபேஸ் செய்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-03-09 19:24 GMT

போலீஸ் எனக்கூறி முதியவரிடம் 1½ பவுன் மோதிரங்களை அபேஸ் செய்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

போலீஸ் என கூறி

திருச்சி ஸ்ரீரங்கம் மேலவாசல் பகுதியை சேர்ந்தவர் விஜயராகவன் (வயது 76). இவர் சம்பவத்தன்று மதியம் அடையவளஞ்சான் வீதியில் தனியாக நடந்து சென்றார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் தங்களை போலீஸ் என்று கூறி அவரிடம் அறிமுகம் செய்து கொண்டனர்.

பின்னர், அவருக்கு, இப்படி கையில் மோதிரங்களை அணிந்து கொண்டு வயதான காலத்தில் தனியாக நடந்து செல்லக்கூடாது. திருடர்கள் பறித்துச்சென்றுவிடுவர். அவற்றை கழற்றி சட்டைப்பையில் பத்திரமாக வைத்துக்கொண்டு வீட்டுக்கு செல்லுங்கள் என்று அறிவுரை கூறியுள்ளனர். உடனே, அவர் மோதிரங்களை கழற்றவே, அவர்கள் அந்த மோதிரங்களை வாங்கி, தாங்கள் வைத்திருந்த காகிதத்தில் பொட்டலமிட்டு கொடுத்துவிட்டு, அங்கிருந்து சென்றுவிட்டனர். வீட்டுக்கு வந்து பார்த்த போது, அந்த பொட்டலத்தில் மோதிரங்கள் இல்லை. அவர்கள் இவருடைய கவனத்தை திசை திருப்பி, 1½ பவுன் தங்க மோதிரங்களை அபேஸ் செய்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, போலீஸ் என்று கூறி முதியவரிடம் மோதிரங்களை அபேஸ் செய்த மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.

மடிக்கணினி திருட்டு

*திருச்சி நெ.1 டோல்கேட் பகுதியை சேர்ந்தவர் பாரி (40). இவர் சத்திரம் பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது, அவர் வைத்திருந்த மடிக்கணினியை திருடியதாக ஸ்ரீரங்கம் சாதரா வீதியை சேர்ந்த சங்கரன் (28), மன்னார்குடியை சேர்ந்த பிரபாகரன் (31) ஆகியோரை கோட்டை போலீசார் கைது செய்தனர்.

மோட்டார் சைக்கிள் திருட்டு

*திருச்சி அரியமங்கலம் காமராஜ்நகரை சேர்ந்த சதாம்உசேன் (26). வெல்டரான இவர், சம்பவத்தன்று பாரதியார் நகர் பகுதியில் நிறுத்தியிருந்த இவரது மோட்டார் சைக்கிளை யாரோ திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெண்ணை கத்தியால் குத்த முயன்றவர் கைது

*திருச்சி மின்னப்பன் தெருவை சேர்ந்த இந்துமதி (42), அவரது கணவர் ராஜதுரை. நேற்று மதியம் வண்ணாரப்பேட்டை பஸ்நிறுத்தம் அருகே இந்துமதி நின்ற போது, அங்கு வந்த சின்னக்கடை வீதியை சேர்ந்த அம்ஜிதீன் உசேன் இந்துமதியை பேச அழைத்து தகராறு செய்ததுடன், அவரை கத்தியால் குத்த முயன்றார். அதைப்பார்த்த பொதுமக்கள் அவரை தடுத்து திருச்சி அரசு ஆஸ்பத்திரி போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்ஜிதீன் உசேனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது

*திருச்சி பாலக்கரை கீழப்புதூர் சாலையை சேர்ந்தவர் குருசாமி (31). இவர் சம்பவத்தன்று காலை காஜாபேட்டை பகுதியில் நடந்து சென்றார். அப்போது, அங்கு வந்த 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றுள்ளனர். அக்கம்பக்கத்தினர் உதவியுடன், அவர் 3 பேரையும் பிடித்து பாலக்கரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அதே பகுதியை சேர்ந்த சூர்யா (20) மற்றும் 2 சிறுவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

கல்லூரி மாணவர் மீது தாக்குதல்

*திருச்சி மேல சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் புவன் (19). இவர் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது நண்பர் சரவணனுடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த சிந்தாமணி பகுதியை சேர்ந்த ரவுடி தினேஷ்குமார் (23) மற்றும் ராஜா (21), குருமூர்த்தி (37), மகாதேவன் (19) ஆகிய 4 பேர் புவனை உருட்டு கட்டையால் தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்