224 பயனாளிகளுக்கு ரூ.24½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

சேகரை கிராமத்தில் நடந்த மக்கள் நேர்காணல் முகாமில் 224 பயனாளிகளுக்கு ரூ.24½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.

Update: 2022-05-18 18:53 GMT

கூத்தாநல்லூர்;

சேகரை கிராமத்தில் நடந்த மக்கள் நேர்காணல் முகாமில் 224 பயனாளிகளுக்கு ரூ.24½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.

மக்கள் நேர்காணல் முகாம்

கூத்தாநல்லூர் அருகே உள்ள சேகரை கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில் பட்டா மாற்றம் மற்றும் சிட்டா நகல், விலையில்லா வீட்டுமனைப்பட்டா, புதிய குடும்ப அட்டை,மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி தொகை, முதியோர் உதவித்தொகை, இலவச தையல் எந்திரம், விலையில்லா இஸ்திரிப்பெட்டி, வேளாண்மை இடுபொருட்கள் உள்பட 224 பயனாளிகளுக்கு ரூ.24 லட்சத்து 33 ஆயிரத்து 972 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.

கொரோனா தடுப்பூசி

பின்னர், கலெக்டர் கூறுகையில், மக்கள் நேர்காணல் முகாம் என்பது மக்களை தேடி அலுவலர்கள் நேரடியாக தங்களது கிராமத்திற்கே வந்து, பொதுமக்களாகிய உங்களிடம் மனுக்களை பெற்று, அதற்குண்டான தீர்வுகளை அளிப்பதாகும். கொரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டு, இரண்டாம் தவணை தடுப்பூசி தகுதியேற்பு நாள் கொண்டவர்கள், தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும்.

முன் களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது. கிராம சபை கூட்டங்களில் பொது மக்கள் கட்டாயம் கலந்து கொண்டு கிராம வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும்.

சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்

மக்களைத்தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் மக்களின் இருப்பிடங்களிலேயே செயல்படுத்தப்படுகிறது. அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு, இதை சரியான சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.இவ்வாறு கூறினார்.

முகாமில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், நீடாமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் சோம.செந்தமிழ்செல்வன், சுகாதார துறை இணை இயக்குனர் செல்வகுமார், மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அழகிரிசாமி, தாசில்தார் பரஞ்சோதி மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்