நிலுவை சம்பளம் உள்ளிட்ட பணப் பலன்கள் வழங்கக்கோரிநகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் போராட்டம்-ஆர்.டி.ஓ. தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு

நிலுவை சம்பளம் உள்ளிட்ட பண பலன்களை வழங்க கோரி கூடலூர் நகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆர்.டி.ஓ தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

Update: 2023-09-13 19:00 GMT

கூடலூர்

நிலுவை சம்பளம் உள்ளிட்ட பண பலன்களை வழங்க கோரி கூடலூர் நகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆர்.டி.ஓ தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

வேலை நிறுத்த போராட்டம்

கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்களுக்கு ஒப்பந்ததாரர் மூலம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அரசு நிர்ணயித்த சம்பளம் வழங்குவதில்லை என தூய்மை பணியாளர்கள் நீண்ட காலமாக புகார் தெரிவித்து வருகின்றனர். இதேபோல் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உட்பட பண பலன்களும் அவர்களது கணக்கில் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நகராட்சி அலுவலகத்தில் மீண்டும் அதே ஒப்பந்ததாரருக்கு திடக்கழிவு மேலாண்மை திட்ட ஒப்பந்த பணி வழங்க தேர்வு செய்யப்பட்டது. இதற்கு நகராட்சி மன்றத்தில் பெரும்பாலான கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஒப்புதல் அளிக்க மறுத்தனர். இதேபோல் தூய்மை பணியாளர்களும் கடும் அதிருப்தி அடைந்தனர். இதைத்தொடர்ந்து மறு டெண்டர் விடப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நிலுவை சம்பளம் உள்ளிட்ட பண பலன்களை வழங்க கோரி நகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் நேற்று காலை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்.டி.ஓ. பேச்சுவார்த்தை

மேலும் கூடலூருக்கு தமிழக மக்கள் மறுவாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் ஆகியோர் வருவதால் அவர்களை சந்திக்க தூய்மை பணியாளர்கள் முடிவு செய்தனர். இதுபற்றி தகவல் அறிந்த ஆர்.டி.ஓ முகமது குதரதுல்லா, தாசில்தார் ராஜேஸ்வரி, நகராட்சி ஆணையாளர் பிரான்சிஸ் சேவியர் ஆகியோர் தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மேலும் போலீசார் விரைந்து வந்து நகராட்சி அலுவலகம் முன்பு தடுப்புகளை வைத்து பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தூய்மை பணியாளர்கள் சார்பில் சமூகநீதி தூய்மை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் பன்னீர்செல்வம், திடக்கழிவு மேலாண்மை திட்ட ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது நிலுவை சம்பளம் உள்ளிட்ட பண பலன்களை சம்பந்தப்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு வழங்குவதாக ஒப்பந்ததாரர் தரப்பில் எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கப்பட்டது. இதனால் உடன்பாடு ஏற்பட்டு தூய்மை பணியாளர்கள் மாலை 4 மணிக்கு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்