காதல் திருமணம் செய்த 6 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை
நாகர்கோவிலில் காதல் திருமணம் செய்த 6 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் காதல் திருமணம் செய்த 6 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
காதல் திருமணம்
மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 24), கட்டிட தொழிலாளி. அழகியபாண்டியபுரத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி (21). இவர்கள் 2 பேரும் காதலித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகு இருவரும் நாகர்கோவில் வாத்தியார்விளையில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தனர்.
நேற்றுமுன்தினம் சரஸ்வதி உறவினர் வீட்டிற்கு சென்றிருந்ததாக தெரிகிறது. இதனால் அன்றைய தினம் இரவு அன்பழகன் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். பின்னர் நேற்று காலையில் சரஸ்வதி வீட்டுக்கு வந்த போது கதவு உள்புறமாக பூட்டி இருந்தது.
புதுமாப்பிள்ளை தற்கொலை
உடனே அவர் கதவை தட்டி பார்த்தார். ஆனால் உள்ளே இருந்து எந்தவொரு சத்தமும் வரவில்லை. இதனால் அவர் ஜன்னல் வழியாக பார்த்த போது அன்பழகன் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு திரண்டனர். மேலும் இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே வடசேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (பயிற்சி) பாலசுப்பிரமணியன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அன்பழகனின் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குடும்ப தகராறில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமான 6 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.