காதலன் இறந்த சோகத்தில் புதுப்பெண் தற்கொலை

காதலன் இறந்த சோகத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-08-10 20:31 GMT

காதல்

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர் மயிலாத்தாள் (வயது 65). இவரது பேத்தி பூமிகா (20). இவரது பெற்றோர் இறந்து விட்டதால் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் பூமிகாவும், அதே பகுதியை சேர்ந்த பாண்டி என்பவரும் காதலித்தனர். மேலும் திருமணம் செய்து கொள்ளாமல், அவர்கள் ஓராண்டாக சேர்ந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பூமிகாவுக்கும், திருச்சி எடமலைப்பட்டிபுதூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ரகுவுக்கும் (25) இடையே 'இன்ஸ்டாகிராம்' மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள், ரகுவின் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஜூலை மாதம் 5-ந்தேதி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பூமிகா, கணவருடன் திருச்சியில் வசித்து வந்தார்.

விஷம் தின்றார்

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பூமிகா, தனது உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சொந்த ஊருக்கு சென்றார். அப்போது அவரது முன்னாள் காதலன் பாண்டி இறந்துவிட்டது அவருக்கு தெரியவந்தது. இதனால் அவர் சோகத்தில் இருந்து வந்தார். மேலும் அவர் திருச்சிக்கு வராததால், ரகு செல்போன் மூலம் பூமிகாவை தொடர்பு கொண்டு வீட்டுக்கு அழைத்துள்ளார்.

ஆனால் பூமிகா திருச்சிக்கு வர மறுத்துள்ளார். இதனால் மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் ரகு எலி பசையை (விஷம்) தின்றார். இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சாவு

இதுபற்றி தகவல் அறிந்த பூமிகா, பஸ்சில் ஊருக்கு திரும்பினார். அப்போது காதலன் இறந்த சோகம் தாங்காமல் அவரும் எலி பசையை தின்றார். பின்னர் வீட்டிற்கு வந்த அவர், தான் விஷம் தின்றதை உறவினர்களிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து பூமிகாவை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பூமிகா இறந்தார். இது குறித்து கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்