கிராமங்களில் களை கட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்

கிராமங்களில் களை கட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்

Update: 2023-01-01 16:27 GMT

போடிப்பட்டி,

உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதி கிராமங்களில் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பயணத் தோழன்

ஒவ்வொரு விடியலையும் சிறப்பானதாக எண்ணிக் கொண்டால் வாழ்க்கை நமக்கானதாக இருக்கும் என்பார்கள். அந்தவகையில் ஆண்டின் தொடக்க நாள் சிறப்பானதாக இருந்தால் ஆண்டு முழுவதும் சிறப்பாக இருக்கும் என்பது பெரும்பாலானவர்களின் நம்பிக்கையாகும்.பொதுவாக கிராமப்புறங்களில் தமிழ்ப் புத்தாண்டு தினமான சித்திரை 1 மற்றும் தைப்பொங்கல் விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதிலும் கொங்கு மண்டலம் விவசாயம் சார்ந்ததாக இருப்பதால் மாட்டுப் பொங்கல் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இந்த பகுதிகளில் மாடுகளுக்கும் உழவர்களுக்குமான பந்தம் என்பது பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமான உறவைப் போல நேசம் மிகுந்ததாகவே உள்ளது.இதனால் குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் செல்லும்போது அவர்களின் பயணத் தோழனாக மாடுகளையே தேர்ந்தெடுக்கின்றனர். இதனால் தான் பல நவீன போக்குவரத்து வசதிகள் வந்து விட்ட போதும் நமது பாரம்பரிய மாட்டு வண்டி பயணத்தை மறக்காமல் உள்ளனர்.

மாட்டு வண்டிகள்

அந்தவகையில் ஆடி அமாவாசை, தை அமாவாசை, தைப் பொங்கல், தமிழ் புத்தாண்டு, ஆடிப் பெருக்கு போன்ற விசேஷ தினங்களில் மாட்டு வண்டி கட்டிக் கொண்டு குடும்பத்துடன் கோவில்களுக்குச் சென்று வழிபாடு செய்வது, ஆற்றங்கரை உள்ளிட்ட இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகளுக்குச் சென்று குடும்பத்துடன் குதூகலிப்பது என்பதை உடுமலை சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.சமீப காலங்களாக இவர்களின் இந்த குதூகல பட்டியலில் ஆங்கிலப் புத்தாண்டு தினமும் சேர்ந்துள்ளது.

இதனையடுத்து நேற்று பல கிராமத்து வீதிகளில் வரிசை கட்டிச் சென்ற மாட்டு வண்டிகளை பார்க்க முடிந்தது.அத்துடன் பழமையும் புதுமையும் கலந்தது போல மாட்டு வண்டிகளுக்கு இணையாக பல இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களில் உலா வந்தனர்.மேலும் நேற்று அதிகாலை முதலே பெரும்பாலான கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். மேலும் சமூக வலைத்தளங்களில் இளைஞர்களுடன் போட்டியிட்டு முதியவர்களும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.ஆனாலும் ஒருசில பகுதிகளில் சாலை ஓரங்களில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து மது அருந்திய காட்சி புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கரும்புள்ளியாக அமைந்தது.

Tags:    

மேலும் செய்திகள்