மின் நிலையத்துக்கு தண்ணீர் திறக்க புதிய வால்வு
சோலையாறு அணையின் மின் நிலையத்துக்கு தண்ணீர் திறக்க புதிய வால்வு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
வால்பாறை
சோலையாறு அணையின் மின் நிலையத்துக்கு தண்ணீர் திறக்க புதிய வால்வு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
மின் நிலையங்கள்
வால்பாறை அருகே சோலையாறு அணை உள்ளது. இது பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தின்(பி.ஏ.பி.) முக்கிய அணையாக விளங்குகிறது. இங்கு 2 மின் உற்பத்தி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
முதலாவது மின் நிலையத்தில் ஒரு மணி நேரத்துக்கு 84 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதன்பிறகு வெளியேற்றப்படும் தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு செல்கிறது.
2-வது மின் நிலையத்தில் ஒரு மணி நேரத்துக்கு 16 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதன்பிறகு வெளியேற்றப்படும் தண்ணீர் ஒப்பந்தப்படி கேரளாவுக்கு வழங்கப்படுகிறது.
வால்வு உடைந்தது
இந்த நிலையில் சோலையாறு அணையில் இருந்து முதலாவது மின் நிலையத்துக்கு தண்ணீர் திறந்துவிடும் வால்வு, உருளிக்கல் எஸ்டேட் பகுதியில் உள்ளது. கடந்த 2-ந் தேதி அந்த வால்வு திறக்கப்பட்டு, மின் நிலையத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
ஆனால் திடீரென ஏற்பட்ட அழுத்தம் காரணமாக வால்வு மற்றும் உபகரணங்கள் உடைந்தன. எனினும் மின் உற்பத்திக்கு தண்ணீர் திறந்து விடுவது பாதிக்கவோ அல்லது சோலையாறு அணையில் இருந்து வரும் தண்ணீர் வீணாகவோ வாய்ப்பு இல்லை என்றும், மாற்றுப்பாதை வழியாக தண்ணீர் திறந்துவிட வசதி உள்ளது என்றும் நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
மாற்றும் பணி
இருந்தாலும், தென்மேற்கு பருவமழை விட்டுவிட்டு பெய்து வருவதால், சோலையாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இதனால் மின் நிலையத்திற்கு தண்ணீர் திறந்து விடும் அளவை கூட்டுவதற்கும், குறைப்பதற்கும், நிறுத்துவதற்கும் வால்வு முக்கியம். எனவே நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி உடைந்த வால்வு மற்றும் உபகரணங்களை மாற்றி புதிதாக அமைக்கும் பணியை தொடங்கியுள்ளனர். இந்த பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.