திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் புதிய அறங்காவலர்கள் பதவி ஏற்றனர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புதிய அறங்காவலர்கள் பதவி ஏற்றனர். அவர்களை அமைச்சர் சேகர்பாபு நேரில் வாழ்த்தினார்.

Update: 2022-09-01 17:11 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புதிய அறங்காவலர்கள் பதவி ஏற்றனர். அவர்களை அமைச்சர் சேகர்பாபு நேரில் வாழ்த்தினார்.

அறங்காவலர்கள் நியமனம்

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டனர்.

அதன்படி திருச்செந்தூர் அருகே மானாடு தண்டுபத்துவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. கே.பி.கே.குமரன் மனைவி அனிதா குமரன், தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியைச் சேர்ந்த செந்தில் முருகன், வடக்கு ஆத்தூரைச் சேர்ந்த ராமதாஸ், சென்னை சாந்தோம் சல்லிவன் தெருவைச் சேர்ந்த அருள் முருகன், தூத்துக்குடி போல்பேட்டையைச் சேர்ந்த கணேசன் ஆகியோர் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டனர்.

பதவி ஏற்றனர்

இந்த நிலையில் அனிதா குமரன் உள்பட 5 பேரும் நேற்று காலையில் திருச்செந்தூர் கோவில் இணை ஆணையர் அலுவலகத்தில் இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி முன்னிலையில் அறங்காவலர்களாக பதவி ஏற்று கொண்டனர்.

தொடர்ந்து அறங்காவலர் குழு தலைவர் தேர்வு, தூத்துக்குடி மண்டல உதவி ஆணையர் சங்கர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் அறங்காவலர் குழு தலைவராக அருள் முருகன் தேர்வு செய்யப்பட்டார்.

அமைச்சர் வாழ்த்து

பின்னர் அவர், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு முன்னிலையில் பதவியேற்று கொண்டார். இதையடுத்து அமைச்சர் சேகர்பாபு, அறங்காவலர்கள் குழுவினருக்கு நேரில் வாழ்த்துகளை தெரிவித்தார்.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

ரூ.300 கோடியில் திருப்பணிகள்

இதுவரையில் வடக்கேதான் ரூ.100 கோடிக்கு மேல் கோவில்களுக்கு திருப்பணி என கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு திருச்செந்தூர் கோவிலில் ரூ.300 கோடியில் திருப்பணிகள் நடைபெறும் என சட்டசபையில் அறிவித்தார். இந்த அறிவிப்பின்படி முழு முயற்சியோடு அறநிலையத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து இந்த திருப்பணிகளை குறித்த காலத்தில் தொடங்கி விரைந்து முடிப்பதற்கான முயற்சி மேற்கொண்டுள்ளோம்.

தமிழக முதல்-அமைச்சரின் இந்த முயற்சிக்கு மேலும் மெருகூட்டி குறித்த காலத்தில் இந்த பணியை நிறைவு செய்ய அறங்காவலர்கள் முழு மனதோடு முயற்சிப்பார்கள் என மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறேன்.

மெகா திட்டம்

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் ஆகியோர் இந்த திருப்பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டுள்ளனர்.

திருச்செந்தூர் கோவிலில் மெகா திட்டத்தை விரைவில் முதல்-அமைச்சர் தொடங்கி வைப்பார். அன்றைய தினத்தில் திட்டம் எப்பொழுது நிறைவடையும் என்பதையும் அவர் அறிவிப்பார். அந்த கால அளவுக்குள் நிச்சயமாக பணிகளை முடிப்பதற்கு இந்து சமய அறநிலையத்துறை முயற்சி மேற்கொள்ளும்.

சொல்லாததையும், சொன்னதையும் செய்கின்ற அரசு இந்த அரசு என்பதை திருச்செந்தூர் கோவில் திருப்பணியில் நிரூபித்து காட்டுவோம்.

திருச்செந்தூர் கோவிலில் மகா கும்பாபிஷேக பணிகள், மெகா திட்டப்பணிகளுடன் இணைந்தே நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்