அதிநவீன நுழைவாயில், சிசிடிவி கேமராக்கள்; தயாராகும் அதிமுக பொதுக்குழு கூட்ட அரங்கம்...!

அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நாளை நடைபெற உள்ளது.

Update: 2022-07-10 08:23 GMT

சென்னை,

பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நாளை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு நாளை காலை 9 மணிக்கு வெளியாக உள்ளது.

அதேவேளை பொதுக்குழு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆர்எஃப்ஐடி என கூறப்படும் ரேடியோபிரிக்யூவன்சி முறையிலான அடையாள அட்டைகள் அதிமுக பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்களுக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடைபெறும் மண்டபத்தில் மொத்த 16 நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பொதுக்குழு செயற்குழுவிற்கு வரக்கூடிய அதிமுக உறுப்பினர்கள் ஆர்எஃப்ஐடி என அழைக்கப்படும் அடையாள அட்டையை எடுத்துவருபர்கள் மட்டுமே இந்த ஸ்கேனர் மூலம் கூட்டம் நடைபெறும் இடத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.

அதற்கான ஏற்பாடுகளை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அதிமுக பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆர்எஃப் ஐடி என்ற அடையாள அட்டையில் உறுப்பினர்களின் முழு விவரம் இடம்பெற்றிருக்கும்.

உறுப்பினரின் பெயர், வயது, புகைப்படம், எந்த மாவட்டத்தை சேர்ந்தவர், எந்த பகுதியை சேர்ந்தவர் என்ற முழு விவரமும் இடம்பெற்றிருக்கும்.

கடந்த 23-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவின் போது ஏராளமானோர் போலி அடையாள அட்டையுடன் உள்ளே வந்துவிட்டதாக ஓபிஎஸ்- ஈபிஎஸ் என இரு தரப்பிலும் பிரச்சினை கிளம்பியது.

அதேபோன்ற பிரச்சினை நாளை நடைபெறும் பொதுக்குழு - செயற்குழு கூட்டத்தில் ஏற்படாமல் இருக்க இந்த ஆர்எஃப் ஐடி அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு செல்ல 16 நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், 12 நுழைவு வாயில்கள் பொதுக்குழு உறுப்பினர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 2 ஆயிரத்து 665 பொதுக்குழு உறுப்பினர்கள் இந்த 12 நுழைவு வாயில்கள் வழியாக கூட்டம் நடைபெறும் பகுதிக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

அதேபோல், மீதமுள்ள 4 நுழைவு வாயில்கள் வழியாக 250 செயற்குழு உறுப்பினர்கள் உள்ளே செல்ல உள்ளனர்.

இந்த 16 நுழைவாயில்களும் ஆர்எஃப்ஐடி எனப்படும் அடையாள அட்டையை வைத்துக்கொண்டுள்ளவர்களே அனுமதிக்கப்படுவார்கள். நுழைவு வாயிலில் அடையாள அட்டையை ஸ்கேன் செய்தால் மட்டுமே உள்ளே செல்ல முடியும். சென்னை மெட்ரோ ரெயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது போன்றே அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் பகுதியில் அதிநவீன நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது தற்போது பேசுபொருளாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்