குற்ற வழக்குகளில் புதிய தொழில் நுட்பங்களை கையாள வேண்டும்
குற்ற வழக்குகளில் புதிய தொழில் நுட்பங்களை கையாள வேண்டும் என்று போலீசாருக்கு வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துச்சாமி அறிவுரை வழங்கினார்.
பயிற்சி வகுப்பு
வேலூர் சரகத்துக்குட்பட்ட வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு குற்ற வழக்குகளை திறம்பட விசாரிக்க குற்ற புலன் விசாரணை குறித்த பயிற்சி வகுப்பு வேலூர் பணியிடை பயிற்சி மையத்தில் தொடங்கியது.
பயிற்சி வகுப்பை வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துச்சாமி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
குற்ற வழக்குகளில் விசாரித்து திறம்பட செயல்பட இந்த பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இதில் அளிக்கப்படும் பயிற்சியை நன்கு கற்றுக்கொள்ள வேண்டும்.
புதிய தொழில்நுட்பம்
கற்றுக்கொடுப்பதை குறிப்பெடுத்துக்கொள்ள வேண்டும். இந்த பயிற்சி உங்களுக்கு பணியின் போது உதவியாக அமையும். பயிற்சி வகுப்புக்கு சரியான நேரத்தில் கலந்து கொள்ள வேண்டும். காலத்துக்கு ஏற்றார்போல் குற்ற வழக்குகளில் நீங்கள் புதிய தொழில்நுட்பம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
அதன்மூலம் குற்ற வழக்குகளில் துப்பு துலக்குவது எப்படி என்பதை கற்று தெரிந்து கொள்ள வேண்டும். அனைத்து வகை குற்ற வழக்குகளிலும் புலன் விசாரணைக்கு இந்த பயிற்சி முக்கியத்துவத்தை கொடுக்கும். விரைவாக வழக்குகளை முடிக்க அதற்கான தகுதி மற்றும் திறமை வளர்த்துக்கொள்ள உதவும். சிறப்பாக செயல்படுபவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
6 நாட்கள்
இந்த பயிற்சி 6 நாட்கள் நடக்கிறது. 4 மாவட்டங்களில் இருந்து முதல்கட்டமாக இதில் 2 இன்ஸ்பெக்டர்கள், 47 சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பணியிடை பயிற்சி மைய துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன், ஓய்வு பெற்ற தடய அறிவியல் உதவி இயக்குனர் பாரி, இன்ஸ்பெக்டர் சரஸ்வதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.