திருப்பூர் புதிய சப்-கலெக்டராக நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் பொறுப்பேற்றார்

திருப்பூர் புதிய சப்-கலெக்டராக நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் நேற்று பொறுப்பேற்றார்

Update: 2022-10-19 13:21 GMT

திருப்பூர்

திருப்பூர் புதிய சப்-கலெக்டராக நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் நேற்று பொறுப்பேற்றார். மக்களின் நலனுக்காக உழைப்பேன் என்று அவர் கூறினார்.

நடிகர் சின்னி ஜெயந்தின் மகன்

திருப்பூர் சப்-கலெக்டராக பணியாற்றி வந்த பண்டரிநாதன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக டெல்லியில் திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் உதவி செயலாளராக பணியாற்றி வந்த ஸ்ருதன் ஜெய் நாராயணன் (வயது 29) திருப்பூர் சப்-கலெக்டராக நியமிக்கப்பட்டார். இவர் நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஆவார்.

திருப்பூர் சப்-கலெக்டராக ஸ்ருதன் ஜெய் நாராயணன் நேற்று காலை சப்-கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். கலெக்டர் வினீத்திடம் வாழ்த்து பெற்றார்.

மக்களின் மேம்பாடு

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருப்பூர் சப்-கலெக்டராக பொறுப்பேற்றதில் மகிழ்ச்சியாக உள்ளது. திருப்பூர் மக்களின் நலனுக்கும், மேம்பாட்டுக்காகவும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் இணைந்து எனது உழைப்பை வழங்குவேன். திரைத்துறை குடும்பத்தை சேர்ந்தவன் என்றாலும் எனது பெற்றோர் எனது சிறு வயதில் இருந்தே என் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். எனது ஆசிரியர்களின் வழிகாட்டுதல், அறிவுரையால் இந்த நிலையை எட்ட முடிந்தது. அதற்கு எனது பெற்றோர், ஆசிரியர், நண்பர்களுக்கு நன்றி.

இவ்வாறு அவர் கூறினார்.

ஸ்ருதன் ஜெய் நாராயணன் பொறியியல் பட்டப்படிப்பு முடித்து ஐ.டி. துறையில் பணியாற்றியவர். அதன்பிறகு ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி கடந்த 2020-ம் ஆண்டு அகில இந்திய அளவில் 75-வது இடம் பெற்று தேர்ச்சி பெற்றார். இவர் தூத்துக்குடி மாவட்ட பயிற்சி உதவி கலெக்டராகவும் பணியாற்றியுள்ளார்.

-

Tags:    

மேலும் செய்திகள்