ஊராட்சி வளர்ச்சிக்கு புதிய திட்டங்களை தேர்வு செய்யலாம்
ஊராட்சி வளர்ச்சிக்கு புதிய திட்டங்களை தேர்வு செய்யலாம் என்று வீராமூர் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் மோகன் பேசினார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் காணை ஊராட்சி ஒன்றியம் வீராமூர் ஊராட்சியில் குடியரசு தின விழாவையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மோகன் சிறப்பு பார்வையாளராக கலந்துகொண்டார். விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், வீராமூர் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன், கலெக்டர் மோகன் கலந்துரையாடியதோடு அவர்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். அப்போது கலெக்டர் மோகன் பேசியதாவது:-
வளர்ச்சி பணிகள்
கிராம சபையின் நோக்கம், ஊராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை பொதுமக்கள் முன்னிலையில் ஒருமனதாக நிறைவேற்றுவதே ஆகும். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதுபோல் நடைபெறும் கிராம சபைக்கூட்டத்தில் பொதுமக்கள் முழுமையாக கலந்துகொள்ள வேண்டும். அவ்வாறு கலந்துகொண்டால்தான், கடந்த ஆண்டு ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட வரவு- செலவு தணிக்கை அறிக்கை, நடப்பு ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ள ஊராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த நிதியுதவியை பெற ஏதுவாக இருக்கும்.
அதுமட்டுமின்றி ஊராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான புதிய திட்டங்களை தேர்வு செய்து ஒருமனதாக நிறைவேற்ற இதுபோன்ற கிராம சபைக்கூட்டம் மிக பயனுள்ளதாக இருக்கும். அதேபோல் ஊராட்சி பகுதிகளில் பணிகள் நடைபெறும்போது பொதுமக்கள் பார்வையிட்டு தங்கள் ஊராட்சிக்கு தேவையான திட்டங்களை சிறந்த முறையில் செயல்படுத்தி பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
வழிவகை ஏற்படும்
குறிப்பாக கிராம சபைக்கூட்டத்தின்போது பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்தல், திறந்தவெளியில் இயற்கை உபாதை, சிறுநீர் கழிப்பதை தவிர்த்து கழிப்பறையை பயன்படுத்துதல், ஊராட்சியை தூய்மையாக வைத்துக்கொள்ளுதல் போன்ற உறுதிமொழிகள் எடுக்கப்பட்டு தொடர்ந்து பின்பற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வழிவகை ஏற்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், கூடுதல் கலெக்டர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சித்ரா விஜயன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பொன்னம்பலம், காணை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கலைச்செல்வி, துணைத்தலைவர் வீரராகவன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் கல்பட்டு ராஜா, மாவட்ட கவுன்சிலர்கள் முருகன், சிவா, வீராமூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.