தர்மபுரியில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய விளையாட்டு அரங்கம்-ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் சாந்தி தகவல்
தர்மபுரி:
தர்மபுரியில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தர்மபுரி மாவட்ட விளையாட்டு பிரிவின் சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்டு, உடற்பயிற்சி மற்றும் இளைஞர் நல ஆலோசனை குழு கூட்டம் தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் கலெக்டரை தலைவராக கொண்டு 21 உறுப்பினர்களுடன் மாவட்ட அளவிலான விளையாட்டு, உடற்பயிற்சி மற்றும் இளைஞர் நல குழு அமைக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் விளையாட்டு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த குழு செயல்பட வேண்டும். தர்மபுரியில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த புதிய விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கு விரைவில் இடம் தேர்வு செய்யப்படும். மேலும் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மைதானங்களை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
முழு ஒத்துழைப்பு
இந்த கூட்டத்தில் விளையாட்டு, உடற்பயிற்சி குழு உறுப்பினர்கள் தெரிவிக்கும் கருத்துகள் பதிவு செய்யப்பட்டு, அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் மாவட்டத்தில் விளையாட்டு துறையை மேம்படுத்த அலுவலர்கள் மற்றும் இளைஞர் நல குழு உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார். கூட்டத்தில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், மாவட்ட அளவிலான விளையாட்டு உடற்பயிற்சி மற்றும் இளைஞர் நல குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.