கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய திட்டம்; அமைச்சர் எ.வ.வேலு தகவல்

கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய திட்டம் தயாரிக்கப்படுவதோடு, மண் சரிவு-விபத்தை தடுக்க நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

Update: 2023-07-04 21:00 GMT

கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய திட்டம் தயாரிக்கப்படுவதோடு, மண் சரிவு-விபத்தை தடுக்க நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

சாலை பாதுகாப்பு

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் கூடுதல் தலைமை செயலாளர் பிரதீப்யாதவ் தலைமை தாங்கினார். கலெக்டர் பூங்கொடி முன்னிலை வகித்தார். இதில், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் கலந்து கொண்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் கூட்டத்தில், அமைச்சர் இ.பெரியசாமி பேசுகையில், திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் விபத்துகள் நடைபெறும் பகுதிகளை கணக்கெடுத்து மேம்பாலம், சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். இதற்காக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளை கொண்டு கூட்டம் நடத்த வேண்டும். கொடைக்கானலில் விடுமுறை நாட்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். 2 ஆயிரம் வாகனங்களை நிறுத்தும் வகையில் வசதி செய்ய வேண்டும் என்றார்.

சுரங்கப்பாதை

அமைச்சர் அர.சக்கரபாணி பேசும்போது, மராட்டியத்துக்கு அடுத்து தமிழகத்தில் வாகனங்கள் அதிகமாக உள்ளன. எனவே விபத்துகளை தடுக்க சாலை, மேம்பாலம், சுரங்கப்பாதை வசதிகள் தேவை. ஒட்டன்சத்திரம்-அவினாசி சாலையை முறையாக அமைக்காததால் விபத்துகள் அதிகமாக நடக்கின்றன. அதேபோல் விபத்துகள் அதிகம் நடக்கும் கொல்லப்பட்டி, தங்கச்சியம்மாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்றார்.

மேலும் திண்டுக்கல்லில் கட்டப்பட்டுள்ள பாலகிருஷ்ணாபுரம் மேம்பாலம், எம்.வி.எம்.நகர் சுரங்கப்பாதையை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். பஸ்கள், டிராக்டர்கள், டிப்பர் லாரிகளின் பின்பகுதியில் சிவப்பு விளக்கு கட்டாயம் பொருத்த வேண்டும். நாகல்நகர், திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் நடைபாலம் அமைக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை எம்.எல்.ஏ.க்கள் இ.பெ.செந்தில்குமார், காந்திராஜன் மற்றும் பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தினர்.

சாலை விபத்துகள்

அதன்பிறகு அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-

தமிழகத்தில் நம்மை காக்கும் 48 திட்டத்தில் 237 அரசு ஆஸ்பத்திரிகள், 451 தனியார் ஆஸ்பத்திரிகளில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 231 பேருக்கு ரூ.149 கோடியே 97 லட்சம் செலவில் சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 8 அரசு ஆஸ்பத்திரிகள், 18 தனியார் ஆஸ்பத்திரிகளில் 6 ஆயிரத்து 296 பேருக்கு ரூ.3 கோடியே 83 லட்சம் செலவில் சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது. மரங்கள் சுற்றுச்சூழலை பாதுகாத்து தூய்மையான காற்றை நமக்கு தருகிறது. எனவே சாலை ஓரங்களில் மரங்களை நடும் பணியை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். சாலை விபத்துகளை தடுக்க தடுப்புகள், வேகத்தடைகள் அமைக்க வேண்டும். அந்த வேகத்தடைகளை அடையாளப்படுத்த குறியீடு வரைய வேண்டும். அபாய வளைவுகளில் எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும். சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலைகளை அகலப்படுத்த வேண்டும். சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

புதிய திட்டம்

பின்னர் அமைச்சர் எ.வ.வேலு, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் சாலை பணிகளுக்கு ரூ.301 கோடி ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் முதல்-அமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தில் 4 வழிச்சாலையை அகலப்படுத்தும் பணி ரூ.247 கோடியில் நடக்கிறது. கிராம சாலைகள் திட்டத்தில் 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் கி.மீ. தூரம் சாலை பணி மேற்கொள்ளப்படுகிறது. முதல்கட்டாக 2 ஆயிரம் கி.மீ. பணி மேற்கொள்ள திட்டமிட்டு, திண்டுக்கல்லில் 65 கிராமங்களில் ரூ.176 கோடியில் பணிகள் நடக்கிறது. திண்டுக்கல்லில் நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்க நிலம் எடுப்பு பணி நடக்கிறது. அது முடிந்ததும் திட்டம் மதிப்பீடு தயாரித்து பணிகள் தொடங்கும்.

கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை தடுக்க சாலைகளை அகலப்படுத்துதல், வாகனங்களை நிறுத்தி அனுப்புதல் மேற்கொள்ள புதிய திட்டம் தயாரிக்கப்பட இருக்கிறது. அதேபோல் பழனியில் இருந்து கொடைக்கானலுக்கு ரோப்கார் அமைக்கும் பணிக்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. அதை நிறைவேற்ற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். மழைக்காலத்தில் கொடைக்கானல், ஊட்டியில் மண் சரிவு நடக்கிறது. இதை தடுக்க ஊட்டியில் 3 இடங்களில் புதிய தொழில்நுட்பத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டது. அதேபோல் கொடைக்கானலில் மண் சரிவை தடுக்க 3 அல்லது 4 இடங்களில் தடுப்புகள் அமைக்கப்படும். அதேபோல் கொடைக்கானலில் கொண்டைஊசி வளைவுகளில் விபத்தை தடுக்க நவீன தொழில்நுட்பத்துடன் ரோலர்பேரிங் சிஸ்டம் பயன்படுத்தப்பட இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாநகராட்சி மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, உதவி கலெக்டர் (பயிற்சி) பிரியங்கா, நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் முருகேசன், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் சேக்முகைதீன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, மாவட்ட ஊராட்சி துணை தலைவர் பொன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்