கோத்தகிரியில் ரூ.3½ கோடியில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம்-முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்

கோத்தகிரியில் ரூ.3½ கோடியில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

Update: 2023-05-10 23:30 GMT

கோத்தகிரி

கோத்தகிரியில் ரூ.3½ கோடியில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

ரூ.3½ கோடி நிதி ஒதுக்கீடு

கோத்தகிரி காந்தி மைதானத்திற்கு அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டு 11 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த அலுவலகம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் உரிய பராமரிப்பு இல்லாமல் இருந்த காரணத்தால் கட்டிடத்தின் மேற்கூரை பழுதடைந்து, மழைக்காலங்களில் மழை நீர் ஒழுகி வந்தது. இதனால் அங்கு பணியாற்றும் அலுவலர்கள் மிகுந்த சிரமத்துடன் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதுடன் முக்கியமான ஆவணங்களை பாதுகாத்து வைப்பதற்கும் சிரமம் ஏற்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த ஒப்படைப்பு வருவாய் நிதி திட்டத்தின் கீழ் பழைய கட்டிடத்தை இடித்து அகற்றி, அங்கு அனைத்து வசதிகளுடன் 2 தளத்துடன் கூடிய புதிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்காக ரூ.3 கோடியே 46 லட்சத்து 15 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பணிகள் தொடங்கி கடந்த சில மாதங்களுக்கு முன் நிறைவு பெற்றது.

முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

இந்த புதிய அலுவலக கட்டிடத்தை நேற்று காலை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். மேலும் ஊராட்சி தலைவர்களுக்கான 200 அரசு வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை வகித்தார்.

குன்னூர் ஆர்.டி.ஓ. பூஷனகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோல்டி சாராள், பேரூராட்சி உதவி இயக்குனர் இப்ராகிம்ஷா, மாவட்ட ஊராட்சி தலைவர் பொந்தோஸ், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார். சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசினார். இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், 11 கிராம ஊராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள், உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட கிராம ஊராட்சிகளின் உதவி இயக்குனர் சாம்சன் சாந்தகுமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்