ஓசூரில்வணிகவரி கோட்ட புதிய அலுவலகங்கள்முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்

Update: 2023-07-21 19:45 GMT

ஓசூர்

ஓசூரில் வணிகவரி கோட்ட புதிய அலுவலகங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

புதிய அலுவலகங்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள பெட்ரோல் நிலையம் அருகே வணிக வரிக் கோட்ட இணை ஆணையர் (மாநில வரிகள்) மற்றும் நுண்ணறிவு இணை ஆணையர் ஆகிய அலுவலகங்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. இதனை, நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். தொடர்ந்து, ஓசூர் வணிகவரி கோட்ட அலுவலகத்தில், மாவட்ட கலெக்டர் சரயு குத்து விளக்கேற்றி வைத்து இனிப்பு வழங்கினார். ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து கலெக்டர் பேசியவதாவது:-

வணிக வரித்துறையில் தமிழக அளவில் 7 நிர்வாக கோட்டங்கள் மற்றும் 6 நுண்ணறிவு கோட்டங்கள் உருவாக்கப்பட்டு, அதன் ஒரு பகுதியாக தற்போது, சேலம் வணிக வரி கோட்டத்தில் இருந்து தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கிய புதிய ஓசூர் வணிக வரி கோட்டம் உருவாக்கப்பட்டு இன்று முதல்-அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கோட்டத்தில், மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டணம், பர்கூர், போச்சம்பள்ளி, ஓசூர், சூளகிரி, வேப்பனப்பள்ளி ஆகிய தாலுகாக்களில் பதிவு பெற்ற வணிகர்கள் பயன் பெறுவார்கள்.

25,367 வணிகர்கள் பதிவு

கிருஷ்ணகிரி வணிகவரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி- 1, கிருஷ்ணகிரி-2, ஓசூர் தெற்கு-1, தெற்கு-2, தெற்கு-3 மற்றும் ஓசூர் வடக்கு-1, வடக்கு-2 ஆகிய 7 வணிக வரி சரகங்கள் செயல்படும். ஓசூரில் உருவாகியுள்ள புதிய கோட்டத்தில் 2022- 2023-ல், ரூ.7 கோடியே 46 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டு உள்ளது. இதில் மொத்தம் 25,367 வணிகர்கள் பதிவு பெற்றுள்ளனர்.

பெருவாரியான வரி செலுத்தும் ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி வணிகர்களின் நலனை கருத்தில் கொண்டு, இந்த புதிய கோட்டம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா, உதவி கலெக்டர் சரண்யா, வணிக வரித்துறை இணை ஆணையர்கள் நாராயணன் (நிர்வாகம்), ஜெயராமன் (நுண்ணறிவு), துணை ஆணையர்கள் ஹேமா (கிருஷ்ணகிரி), சங்கரமூர்த்தி மற்றும் உதவி ஆணையர்கள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்