அமாவாசை பூஜை

சாணார்பட்டி அருகே கோவிலில் மார்கழி மாத அமாவாசையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2022-12-23 19:00 GMT

சாணார்பட்டி அருகேயுள்ள மேட்டுக்கடை மல்லத்தான்பாறையில் அமைந்துள்ள ஆதிபரஞ்ஜோதி சகலோக சபை கோவிலில் மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு மகா பிரத்யங்கராதேவி பூஜை நடைபெற்றது. இதற்கென யாக குண்டத்தின் முன்பு பிரத்யங்கரா தேவி அம்மன் பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தார். கோவிலின் நிர்வாகி திருவேங்கடஜோதி பட்டாச்சாரியார் வேத மந்திரங்கள் ஓதி காய்ந்த மிளகாய்களை மூட்டை மூட்டையாக தீ வளர்க்கப்பட்ட யாக குண்டத்தில் கொட்டி பூஜை நடத்தினார். இதனை தொடர்ந்து பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களும் மந்திரங்களை கூறி, தங்களின் வேண்டுதல்களை பனை ஓலைகளில் எழுதி யாக குண்டத்தில் இட்டு வழிபட்டனர். இதில் திண்டுக்கல், தேனி, மதுரை, கோவை, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்தனர். மேலும் வெளிநாட்டு பக்தர்கள் இணையவழியில் பூஜையில் பங்கேற்றனர். முன்னதாக அங்குள்ள கோ சாலையில் வளர்க்கப்படும் 50-க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளுக்கு அமாவாசையை முன்னிட்டு அகத்திகீரை வழங்கி கோ பூஜை நடத்தினர். மேலும் ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயர் சிலைக்கு வெற்றிலை மாலை அணிவிக்கப்பட்டு பூஜை நடைபெற்றது. முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்