உற்பத்தி, கொள்முதலை அதிகரிக்க புதிய பால் உற்பத்தி கூட்டுறவு சங்கங்கள் தொடங்கப்படும்-அமைச்சர் மனோதங்கராஜ் தகவல்

உற்பத்தி, கொள்முதலை அதிகரிக்க, புதிய பால் உற்பத்தி கூட்டுறவு சங்கங்கள் தொடங்கப்படும் என கிருஷ்ணகிரியில் பால் வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்தார்.

Update: 2023-08-23 18:45 GMT

அமைச்சர் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், தொகுப்பு பால் குளிர்விப்பு மையங்கள், கிருஷ்ணகிரி சமநிலை பால் பண்ணையில் நேற்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து கிருஷ்ணகிரி ஆவின் பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலகத்தில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் அமைச்சர் மனோதங்கராஜ் பங்கேற்று பேசினார். இந்த ஆய்வு கூட்டத்திற்கு கலெக்டர் கே.எம்.சரயு, ஓசூர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது:-

கடனுதவி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாலின் தரம், கலப்படம் அறியும் தலா 60 கருவிகள் ரூ.98 லட்சம் மதிப்பில் வழங்கப்பட உள்ளன. பால் உற்பத்தியாளர்களுக்கு தரத்தின் அடிப்படையில் பால் பணம் வழங்கப்படுகிறதா? என ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி ஆவினில் 2 லட்சத்து 10 ஆயிரம் லிட்டர் பால் கையாளுகின்ற வசதி இருந்தும், கடந்த காலங்களில் பால் கொள்முதல் மிகவும் குறைவாக இருந்தது. தற்போது பல்வேறு நடவடிக்கைகள் மூலம் அவை சீர்செய்யப்பட்டு உள்ளது.

கடந்த 3 மாதங்களில் ஆவினில் பால் கொள்முதல் அதிகரிக்கப்பட்டு உள்ளது. மேலும் பால் கொள்முதலை அதிக அளவில் உற்பத்தி செய்ய அனைத்து இடங்களிலும் புதிய பால் உற்பத்தி கூட்டுறவு சங்கங்கள் தொடங்கப்படும். ஏற்கனவே இருக்கும் சங்கங்கள் வலுப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சான்றிதழ்கள்

தொடர்ந்து 12-ம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பிடித்த பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு ரொக்க பரிசும், சான்றிதழ்களையும் அமைச்சர் வழங்கினார். மேலும் அதிகப்படியாக பால் உற்பத்தி செய்து ஆவினுக்கு வழங்கிய ஊத்தங்கரை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு முதல் பரிசும், கெங்கபிராம்பட்டி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு 2-ம் பரிசும், பூசாரிப்பட்டி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு 3-ம் பரிசும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஆவின் பொது மேலாளர் சுந்தர வடிவேல், முன்னாள் எம்.எல்.ஏக்கள் செங்குட்டுவன், முருகன், ஒன்றியக்குழு தலைவர் உஷாராணி குமரேசன், பேரூராட்சி தலைவர் அமானுல்லா, மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் மாலதி நாராயணசாமி, கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரஜினி செல்வம், தி.மு.க. ஒன்றிய செயலாளர் குமரேசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கலீல், சின்னத்தாய், மணிகண்டன், பூபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்