லால்பேட்டை பகுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்
லால்பேட்டை பகுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
காட்டுமன்னார்கோவில்,
கடலூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பில் காட்டுமன்னார்கோவில் தாலுகா லால்பேட்டை, ஸ்ரீஞானவிநாயகர்சாமி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் மேளா மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. இதற்கு கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குனர் மஞ்சுளா தலைமை தாங்கினார். கள அலுவலர்கள் குமராட்சி பாலமுருகன், காட்டுமன்னார்கோவில் அந்தோணிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு கடன் சங்க தலைவர்கள் நசீர்அகமது, தோத்தாத்திரி ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர். முகாமில் வங்கி ஆய்வாளர் விஜயகுமார், செயலாளர்கள் சண்முகசுந்தரம், அருட்செல்வன் மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக முகாமில் அனைத்து வகையான கடன் உதவிகள் கேட்ட சங்க உறுப்பினர்களிடம் இருந்தும், புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டது.
கூட்டுறவு சங்கத்தில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் உறுப்பினராகலாம். கூட்டுறவு கடன் சங்கங்களில் வட்டியில்லா பயிர்க்கடன், நகைக்கடன், கறவைமாடு கடன், சிறு பால்பண்ணை கடன், கால்நடை பராமரிப்பு கடன், மாற்றுத்திறனாளி கடன், மிக குறைந்த வட்டியில் மகளிர் சுயஉதவிக்குழு கடன், விதவைகள், ஆதரவற்ற விதவைகள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் கடன் வழங்கப்படுகிறது. எனவே உறுப்பினர் இல்லாத விவசாயிகள், பொதுமக்கள் உறுப்பினராக சேர்ந்து கடன்உதவி பெற்று பயன் அடையலாம் என மேலாண்மை இயக்குனர் மஞ்சுளா தெரிவித்தார்.