திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்பட 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரி

திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்பட 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரி அமைக்கப்பட இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Update: 2022-08-21 11:45 GMT

திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்பட 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரி அமைக்கப்பட இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தடுப்பூசி முகாம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் உள்ள ஷூ நிறுவனத்தில் 34-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்து கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

50 ஆயிரம் முகாம்கள்

தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. முதல் தவணை செலுத்திக் கொண்டவர்கள் 27 லட்சத்து 75 ஆயிரத்து 702 பேர். இரண்டாவது தவணை செலுத்திக்கொள்ள வேண்டியவர்கள் 90 லட்சத்தி 16 ஆயிரத்து 434 பேர். பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியவர்கள் 3 கோடியே 53 லட்சத்து 94 ஆயிரத்து 346 பேர். 12 மணி நேரமும் இடைவேளை இல்லாமல் தொடர்ச்சியாக 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 75 நாட்கள் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தனியார் மருத்துவமனையில் ரூ.386 கொடுத்து பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நிலை இருந்தது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளுக்கு இணங்க பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தடுப்பூசி அவசியம் என்பதை மக்கள் உணர வேண்டும்.

தொய்வு ஏற்பட்டுள்ளது

செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்கு பிறகு தடுப்பூசி பணம் கொடுத்து செலுத்தும் நிலை ஏற்பட்டு உள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் தவணை 82 சதவீதம் பேரும், 2-வது தவணை 75 சதவீதம் பேரும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். மாநில அளவில் 89.4 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. அதற்கு காரணம் இங்குள்ள மக்கள் வெளி மாநிலங்களுக்கு வேலைக்கு சென்று விடுவதால் இந்த தொய்வு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உயிர் பாதிப்புகள் எதுவும் இல்லை. 90 சதவீதம் பேர் நோய் எதிர்ப்பு சக்தியோடு உள்ளனர். நோய் எதிர்ப்பு சக்தி விரைவில் குறைந்து விடும். எனவே பூஸ்டர் தடுப்பூசி அவசியம் போட்டுக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் இதுவரை 12 கோடியே 15 லட்சத்து 76 ஆயிரத்து 125 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

புதிய மருத்துவ கல்லூரிகள்

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி வேண்டுமென்று கோரிக்கை உள்ளது. விரைவில் அது நிறைவேற்றப்படும். தமிழகம் முழுவதும் 36 மருத்துவ கல்லூரிகள் உள்ளது. திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, மயிலாடுதுறை, பெரம்பலூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு விரைவில் மருத்துவக் கல்லூரி கொண்டுவர மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதாரம் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் ரூ.84 கோடியே 31 லட்சத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ.60 கோடி செலவில் திருப்பத்தூர் தலைமை மருத்துவமனையில் பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ.1¼ கோடி செலவில் புதிய ஒருங்கிணைந்த ஆய்வு கூடம் கட்டப்பட உள்ளது.

ரூ.20 லட்சத்தில் வாணியம்பாடியில் பச்சிளம் குழந்தைகள் செவித்திறன் கண்டறியும் மற்றும் நவீன மிஷின்கள் அமைக்கப்பட இருக்கிறது. ரூ.6 கோடி மதிப்பீட்டில் மருந்து கிடங்கு இந்த மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ளது. இப்படி ஏராளமான பணிகள் இந்த மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கலெக்டர் அமர்குஷ்வாஹா, எம்.எல்.ஏ.க்கள் தேவராஜி, வில்வநாதன், நல்லதம்பி, அமுலு விஜயன், மாதனூர் ஒன்றியக் குழு தலைவர் சுரேஷ்குமார், ஆம்பூர் நகரமன்ற தலைவர் ஏஜாஸ் அகமது, துணைத் தலைவர் ஆறுமுகம், மாவட்ட ஊராட்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, நலப்பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து, சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்