மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா-மஞ்சள் காமாலையை கண்டறியும் ஆய்வகம் திறப்பு
மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.1¼ கோடியில் அமைக்கப்பட்ட கொரோனா, மஞ்சள் காமாலையை கண்டறியும் ஆர்.டி.பி.சி.ஆர். ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது.
மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.1¼ கோடியில் அமைக்கப்பட்ட கொரோனா, மஞ்சள் காமாலையை கண்டறியும் ஆர்.டி.பி.சி.ஆர். ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது.
ஆர்.டி.பி.சி.ஆர். ஆய்வகம்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியில் ரூ.1 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் ஆர்.டி.பி.சி.ஆர். ஆய்வகம் அமைக்கப்பட்டு உள்ளது. இதை சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனையொட்டி மன்னார்குடி ஆஸ்பத்திரியில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட காலக்டர் காயத்ரி கிருஷ்ணன், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, சுகாதாரத்துறை இணை இயக்குனர் செல்வகுமார், மன்னார்குடி உதவி கலெக்டர் கீர்த்தனா மணி, மன்னார்குடி நகரசபைதலைவர் மன்னை.சோழராஜன், நகரசபை துணை தலைவர் கைலாசம், ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் விஜயகுமார், ஆஸ்பத்திரி நிலைய அலுவலர் கோவிந்தராஜ், ஆர்.டி.பி.சி.ஆர். ஆய்வக அலுவலர் பாரதிகண்ணம்மா, தேசிய நல்வாழ்வு குழும அலுவலர் வினோத்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கொரோனா- மஞ்சள் காமாலை
ஆய்வகத்தின் மூலம் கொரோனா வைரஸ் தொற்று, மஞ்சள்காமாலை வைரஸ், டெங்கு வைரஸ் போன்ற பல்வேறு வகையான வைரஸ் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை வழங்க முடியும்.
மாவட்டத்தில் இதுவரை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மட்டுமே இந்த ஆய்வகம் செயல்பட்டு கொண்டிருந்தது. தற்போது கூடுதலாக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியிலும் ஆர்.டி.பி.சி.ஆர். ஆய்வகமானது இன்று முதல் செயல்பட தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.