கடலூரில் புதிய உச்சம்: ஒரு கிலோ இஞ்சி ரூ.300 ஆக உயர்வு காய்கறி விலை உயர்வால் விற்பனை மந்தம்

கடலூரில் இஞ்சி விலை புதிய உச்சம் தொட்டுள்ளது. ஒரு கிலோ இஞ்சி ரூ.300-க்கு உயர்ந்துள்ளது. காய்கறி விலை உயர்ந்துள்ளதால் கடைகளில் விற்பனை மந்தமாகி உள்ளது.

Update: 2023-07-10 18:45 GMT

தமிழகம் முழுவதும் தக்காளி விலை உயர்வு கடந்த சில நாட்களாகவே மக்கள் மத்தியில் பேசும் பொருளாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது கிடு, கிடு விலை உயர்வால் இஞ்சியும் அந்த வரிசையில் சேர்ந்துள்ளது.

ஆம், கடலூரில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ரூ.200-க்கு விற்பனையான ஒரு கிலோ இஞ்சி விலை தற்போது புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதாவது ஒரே வாரத்தில் ஒரு கிலோ இஞ்சி விலை ரூ.100 அதிகரித்து நேற்று ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கத்தரிக்காயும் உயர்ந்தது

உழவர் சந்தையில் ஒரு கிலோ இஞ்சி ரூ.280-க்கு விற்கப்படுகிறது. அதேபோல் சில்லரை விலையில் ரூ.320 வரை விற்பனையாகிறது. ஒருபுறம் தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, சின்ன வெங்காயம் விலை உயர்ந்து வரும் நிலையில் கத்தரிக்காய் விலையும் உயர தொடங்கியுள்ளது. அதாவது கடந்த வாரம் ரூ.55 முதல் ரூ.60 வரை விற்பனையான ஒரு கிலோ கத்தரிக்காய் நேற்று ரூ.65 முதல் ரூ.70 வரை விற்பனையானது.

விற்பனை மந்தம்

இதேபோல் பச்சை மிளகாய் ரூ.100, சின்ன வெங்காயம் ரூ.110, பாகற்காய் ரூ.80, பீன்ஸ் ரூ.90, அவரைக்காய் ரூ.60, கேரட் ரூ.64, நூக்கோல் ரூ.80, பஜ்ஜி மிளகாய் ரூ.90, குடைமிளகாய் ரூ.70 என விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு காய்கறி விலை கிடு, கிடுவென அதிகரித்துள்ளதால் கடைகளில் விற்பனை மந்தமாக இருக்கிறது. பல்வேறு காய்கறி விலை உயர தொடங்கியுள்ளதால், பொதுமக்கள் சமையலில் காய்கறிகளை குறைந்த அளவிலேயே பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்