புதிய தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி-சபாநாயகர் அப்பாவு அடிக்கல் நாட்டினார்

காவல்கிணறில் புதிய தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு சபாநாயகர் அப்பாவு அடிக்கல் நாட்டினார்.

Update: 2023-07-27 19:09 GMT

பணகுடி:

காவல்கிணறில் புதிய தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு சபாநாயகர் அப்பாவு அடிக்கல் நாட்டினார்.

அடிக்கல் நாட்டு விழா

நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம், வள்ளியூர், நாங்குநேரி, களக்காடு, பாளையங்கோட்டை, சேரன்மாதேவி யூனியன்களில் உள்ள 831 கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் ரூ.605 கோடியில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்துக்காக காவல்கிணறில் 4.35 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.

சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி, அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் காவல்கிணறு விலக்கில் 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிக்கும் அடிக்கல் நாட்டினார்.

விழாவில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-

ஏழைகளின் நலன் காக்கும் அரசு

தமிழகத்தில் ஏழை எளிய மக்களின் நலன் காக்கும் தி.மு.க. அரசு சிறப்பாக நடைபெற்று வருகிறது. தகுதியான அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையாக மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது. அரசு டவுன் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கின்றனர். இதனால் பெண்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளது. இன்னும் 15 மாதங்களில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நிறைவு பெற்றவுடன், அனைத்து வீடுகளுக்கும் சராசரியாக 55 லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட கவுன்சிலர்கள் பாஸ்கர், சாந்தி சுயம்புராஜ், காவல்கிணறு ஊராட்சி தலைவி இந்திரா சம்பு, பங்குதந்தை ஆரோக்கியராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்