ரேஷன் கடைக்கு புதிய நுழைவு வாயில்
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக ரேஷன் கடைக்கு புதிய நுழைவு வாயில் அமைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காரமடை
'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக ரேஷன் கடைக்கு புதிய நுழைவு வாயில் அமைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ரேஷன் கடை
கோவை மாவட்டம் காரமடை கன்னார்பாளையம் பகுதியில் ரேஷன் கடை உள்ளது. காரமடை வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் இந்த ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. அண்ணாமலை முதலியார் வீதி, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 1000 ரேஷன்கார்டு தாரர்கள் இந்த கடையில் பொருட்கள் வாங்கி வருகிறார்கள்.
இந்த ரேஷன் கடை கன்னார்பாளையத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. பின்னர் 15 ஆண்டுகளுக்கு முன்பு பொதுப்பணித்துறை அலுவலக கட்டிடம் கட்டப்பட்டதால், இந்த கடைக்கு செல்ல போதிய வழி இல்லை. 2 அடி அகலம் கொண்ட குறுகிய பாதை வழியாகத்தான் பொதுமக்கள் சென்று வந்தனர்.
புதிய நுழைவு வாயில்
மேலும் இந்த கடைக்கு பொருட்கள் வந்து இறங்கும்போதும், தொழிலாளர்கள் அரிசி, சர்க்கரை, கோதுமை, பருப்பு உள்ளிட்ட மூட்டைகளை இந்த பாதை வழியாகதான் தூக்கி வந்ததால் பெரிதும் அவதியடைந்து வந்தனர். இந்த கடை தொடர்பாக 'தினத்தந்தி'யில் கடந்த 13-ந் தேதி படத்துடன் பொதுமக்கள் கருத்து குறித்த செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, குறுகிய பாதையை அடைத்ததுடன், பொதுமக்கள் விசாலமாக வந்து செல்லும் வகையில் ரேஷன் கடை சுவற்றை உடைத்து, அதில் கதவு அமைத்து புதிதாக நுழைவு வாயில் அமைத்தனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இது குறித்து அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-
தினத்தந்திக்கு நன்றி
இந்த ரேஷன் கடை சாலையை ஒட்டி உள்ள பகுதியில் இருந்தாலும், கடையின் வாசல் உள்பக்கமாக இருந்தது. இதனால் கடையை ஒட்டி குறுகிய பாதை வழியாக உள்பக்கம் சென்று பொருட்கள் வாங்கி திரும்பும் நிலை இருந்தது. ஆனால் தற்போது சாலையை ஒட்டி உள்ள பகுதியிலேயே கடையின் மெயின் வாயிலை அமைத்து உள்ளனர்.
இதனால் நாங்கள் குறுகிய சாலை வழியாக செல்ல வேண்டியது இல்லை. எனவே எங்களின் நிலை கருதி செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.