ரூ.62 லட்சத்தில் புதிய மின்வாரிய அலுவலக கட்டிடம்; சபாநாயகர் மு.அப்பாவு திறந்து வைத்தார்

ஏர்வாடியில் ரூ.62 லட்சத்தில் புதிய மின்வாரிய அலுவலக கட்டிடத்தை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.

Update: 2022-06-29 19:35 GMT

வள்ளியூர்:

ஏர்வாடியில் ரூ.62 லட்சத்தில் புதிய மின்வாரிய அலுவலக கட்டிடத்தை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.

ரூ.62 லட்சம் மதிப்பில் கட்டிடங்கள்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், ஏர்வாடியில் உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் அலுவலகம் கட்ட ரூ.62 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி தரைத்தளத்தில் மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகமும், மேல்தளத்தில் உதவி செயற்பொறியாளர் அலுவலகமும் கட்டப்பட்டு உள்ளது. இந்த புதிய கட்டிடங்கள் திறப்பு விழா நேற்று நடந்தது.

மின்வாரிய தலைமை பொறியாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். மேற்பார்வை பொறியாளர் ராஜன்ராஜ் முன்னிலை வகித்தார். நெல்லை மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் (பொது) வெங்கடேஷ் மணி வரவேற்று திட்ட விளக்க உரையாற்றினார். சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, புதிய கட்டிடங்களை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். பின்னர் அவர் கூறியதாவது:-

கடினமான பணி

தி.மு.க. ஆட்சி பொறுப்பெற்றவுடன் ஓராண்டு காலத்திற்குள் ஒரு லட்சம் இலவச மின் இணைப்புகளை விவசாயிகளுக்கு வழங்கியவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். மின்வாரிய பணி என்பது மிகவும் கடினமான பணியாகும். அத்தகையை பணிகளை செய்து வரும் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விவசாயிகளை மதிக்க வேண்டும்.

விளைபொருட்களை உற்பத்தி செய்து நம்மை வாழ வைத்துக் கொண்டிருப்பவர்கள் விவசாயிகள்தான். கடவுளுக்கு அடுத்தபடியாக விவசாயியைத்தான் நாம் வணங்க வேண்டும். விவசாயி இல்லை என்றால் நமக்கு எதுவும் இல்லை.

குடிநீர் இணைப்பு

திருக்குறுங்குடி, ஏர்வாடி, வள்ளியூர், பணகுடி மற்றும் திசையன்விளை நகர பஞ்சாயத்து பகுதிகளுக்கு தாமிரபரணி குடிநீர் வழங்கும் வகையில் ரூ.271 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. தொடர்ந்து குடிநீர் இணைப்பு கேட்கின்றவர்கள் அனைவருக்கும் வீட்டு குடிநீர் இணைப்புகள் உடனடியாக வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர்கள் செல்வகார்த்திக் (ஏர்வாடி), ஆனந்தகுமார் (வள்ளியூர்), ஜெயலட்சுமி (பணகுடி), ஏர்வாடி உதவி பொறியாளர் ஜெகன், ஏர்வாடி நகர பஞ்சாயத்து தலைவர் தஸ்லிமா, செயல் அலுவலர் ஞானசுந்தரம், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் சித்திக், ஏர்வாடி நகர செயலாளர் அயூப்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளனரசு நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்