எல்லீஸ்சத்திரம், தளவானூரில் விரைவில் புதிய அணைக்கட்டுகள் கட்டப்படும் கலெக்டர் மோகன் தகவல்

எல்லீஸ்சத்திரம், தளவானூரில் விரைவில் புதிய அணைக்கட்டுகள் கட்டப்படும் என்று கலெக்டர் மோகன் தொிவித்துள்ளாா்.

Update: 2022-11-19 18:45 GMT


உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் விழுப்புரம் தொகுதியில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து லட்சுமணன் எம்.எல்.ஏ. ஏற்கனவே மாவட்ட கலெக்டர் மோகனிடம் மனு வழங்கி இருந்தார்.

அந்த வகையில், தளவானூர், எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டில் உடைப்பு ஏற்பட்டு மழைநீரை ஆற்றில் தேக்கி வைக்க முடியாத நிலையில் பொதுமக்களுக்கும், பயிர்களுக்கும் சேதத்தை ஏற்படுத்துகிறது. இங்கு புதிய அணை கட்டவேண்டும். விழுப்புரம் வி.மருதூர் ஏரிக்கரைகளை மேம்படுத்துதல், மதகுகளை சரிசெய்தல், விழுப்புரம் நகரத்தில் உள்ள அரசு மருத்துவமனை பழைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. எனவே மருத்துவமனைக்கு பின்புறம் காலியாக உள்ள 5 ஏக்கர் நிலத்தை பயன்படுத்தி மருத்துவமனைக்கு தேவையான வசதிகளை மேற்கொள்ள வேண்டும், வளவனூர் பேரூராட்சி பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த கோரிக்கைகள் மீது துரித நடவடிக்கை எடுத்தல் தொடர்பாக அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். லட்சுமணன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்து தான் அளித்த கோரிக்கைள் குறித்து பேசினார். இதையடுத்து கலெக்டர் மோகன் கூறுகையில், எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு ரூ.75 கோடியில் கட்டுவதற்கு சில நாட்களில் அரசாணை வரவுள்ளது. தளவானூர் அணைக்கட்டு ரூ.56 கோடியில் கட்டுவதற்கு அரசுக்கு கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதேபோன்று மற்ற கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவித்தார். கூட்டத்தில் விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார செயற்பொறியாளர் ஷோபனா, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் சிவசேனா, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்